சிரம்பான், பிப். 12-

கெட்கோ குடியிருப்பாளர்களின் பிரச்சனையை உடனடியாக அறிந்து கொண்டு அதற்கான தீர்வை எடுப்பதற்கு மாநில மந்திரி பெசார் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை சந்திக்க வேண்டும் என மலேசிய இந்திய காங்கிரசின் நெகிரி செம்பிலான் மாநில இளைஞர் பகுதி தலைவர் ரமேஷ் பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

14ஆவது பொதுத் தேர்தலின்போது மாநில மற்றும் மத்திய அரசாங்கத்தை நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் கைப்பற்றினால் குடியிருப்பாளர்களின் அடிப்படை பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் இதுவரையில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்கு மாநில அரசு எந்த ஒரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என்பதை காரணம் காட்டி கெட்கோ குடியிருப்பாளர்கள் மாநில அலுவலகத்தின் முன் மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எத்தனை நாட்கள் ஆனாலும் மந்திரி பெசாரை சந்திக்காமல் இப்பகுதியை விட்டு நகரப் போவதில்லை என்பதையும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்த ரமேஷ் ராமநாதன் குடியிருப்பாளர்களின் சந்தித்து நிலையை அறிந்து கொண்டார்.

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம்தான் குடியிருப்பாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியை வழங்கியது. அதை நம்பி தான் அவர்கள் கடந்த பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்திற்கு வாக்களித்தார்கள். அந்த நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்காமல் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ரமேஷ் பாலகிருஷ்ணன் முன்வைத்திருக்கிறார்.

இங்கு இருப்பவர்கள் வெயிலிலும் ஒரே இடத்தில் பல மணி நேரம் நின்று கொண்டிருக்கிறார்கள். பலர் மயக்கம் அடைந்து விட்டார்கள். இன்னமும் தாமதிக்காமல் மந்திரி பெசார் சம்பந்தப்பட்டவர்களை சந்திப்பதுதான் சிறந்த நடவடிக்கை என அவர் சுட்டிக்காட்டினார்.

இது அரசியலுக்கு அப்பாற்பட்ட பிரச்சனை. தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பாளர்கள் இப்படிப்பட்ட வேதனையை அனுபவிப்பது மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். நாட்கள் கடக்க கடக்க குடியிருப்பாளர்களின் நிலைமை மேலும் மோசமாகலாம். அதனால் அவர்களை உடனடியாக சந்தித்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தான் சிறப்பாக இருக்கும் என ரமேஷ் வலியுறுத்தினார்.