சிலிம், ஆக. 25-

கம்போங் சுங்கை தேராஸில் உள்ள பூர்வக்குடி (ஒராங் அஸ்லி) சமூகம் இந்த இடைத்தேர்தலில் பயனடைந்த முதல் குழுவாகக் கருதப்படுகின்றார்கள். முன்னதாக ஆகஸ்ட் 22 அன்று அவர்களின் குடியிருப்பு பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.

ஆகஸ்ட் 29 வாக்குப்பதிவு.அதற்கு 7 நாட்களுக்கு முன்னர் இந்த மின்சார சேவை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 226 பேர் வசிக்கும் கிராமமான குலோ பா ரின்தேவுக்கு 1960 களின் முற்பகுதியிலிருந்து மின்சாரம் இல்லை என அங்கு வசிக்கும் டோக் பாடின் கூறியதாக மலேசியாகினி இணையத்தள பதிவேடு செய்தி வெளியிட்டுள்ளது.

தங்களின் தேவைக்காக இரவு 7 முதல் நள்ளிரவு வரை அங்குள்ள மக்கள் மின்னாக்கியைச் (generator) சார்ந்து இருந்ததாகவும் அவர் கூறினார்.

இங்குள்ள கிராம மக்களுக்கு மின்சாரம் கிடைப்பதற்காக காலஞ்சென்ற தமது தந்தையும் அயராது பாடுபட்டதாகக் கூறியவர், அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இக்கிராமத்தில் மின்சார வாரியம் மின் கம்பத்தை அமைத்தபோது தமது நம்பிக்கை பிறந்ததாகவும் கூறினார்.

இதற்கு உதவிப் புரிந்த ரமேஷுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், இவ்வாண்டு சுதந்திர நாளை தங்களின் கிராமவாசிகள் ஒளிமயமாகக் கொண்டாடுவார்கள் என டோக் பாடின் மகிழ்ச்சி தெரிவித்தார்.