ஜொகூர் பாரு, ஏப்ரல் 17-

மலேசியாவின் தென்பகுதி ஜொகூர் மாநிலத்தின் காடுகளில் கெங்காயு என்றும் கோத்தா கெலாங்கி என்றும் பழைய மலாய் சரித்திரக் குறிப்புகளில் கூறப்பட்டிருக்கும் நகரம்.

அது முற்காலத்தில் இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நிலப்பகுதிகளில் செழித்திருந்த ஸ்ரீவிஜயப் பேரரசின் முதல் தலைநகரமாக இருந்திருக்கக் கூடும் என்ற மெல்லிய நூலைப் பிடித்தபடி பயணிக்கும் த்ரில்லர் வகை நாவல்.

இன்று தொலைந்த நகரமாகக் கருதப்படும் கோத்தா கேலாங்கியின் எச்சங்களைத் தேடிப் போகும் செல்லதுரை என்பவர் மாயமாகி விடுகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் என்ன ஆனார் என்று கண்டு பிடிக்க முயலும் விஜயன் என்ற வழக்கறிஞர் அந்த நகரத்தைப் பற்றிய தகவல்களையோ செல்லதுரை பற்றிய விவரங்களையோ சேகரித்து விடாமல் மர்மமான அரசியல் சக்திகளும் பிற அமானுஷ்யங்களும் தடுக்கின்றன.

மர்ம நாவல்தான். ஆனால் நாமெல்லாம் பெரிதாகப் பேசிக் கொண்டிருக்கும் சோழர் வருகைக்கு முன்னாலேயே இந்தோனேசியாவிலும் மலேசியாவிலும் கால் பதித்திருந்த பல்லவர்களைப் பற்றியும் அவர்களுக்குப் பின் இந்த நிலப்பகுதிகளில் ஏற்பட்ட சரித்திர சம்பவங்களைப் பற்றியும் நாவல் அழகாக விவரிக்கறது.

விஜயதுங்கா ஸ்ரீபுவன தேவி, ராயசநகரன், ஜெயகாதவங்கன் பூபதி என்று நமக்கு மிக பரிச்சயமானவர்களின் பெயர்களைப்போல் அக்கால இந்தோனேசிய, மலேசிய அரச அரசியரின் பெயர்கள். அதே சமயம் இந்நாள் மலேசியத் தமிழர்களின் வாழ்வியலையும் பேச்சு வழக்குகளையும் அவர்கள் சந்திக்கும் அரசியல் மற்றும் பிறக் கலாச்சாரச் சவால்களையும் துல்லியமாகத் எடுத்தும் காட்டுகிறது.

சின்ன நாவல்தான். அனுபவித்துப் படித்தேன். எந்த இடத்திலும் தொய்வில்லாத கதையோட்டம். சில இடங்களில் திடுக்கிட வைக்கும் தகவல்கள் உண்டுதான் (உதா. சிங்கப்பூர் ராணுவத்தை ஜோகூர் காடுகளில் எப்படி மலேசியா காவல் பணி செய்ய விட்டிருக்கும்?). ஆனால் புனைவின் சுகத்தில் ஆசிரியர் அவற்றைக்கூட கடந்து போக வைத்து விடுகிறார். பல இடங்களில் அச்சு/எழுத்துப் பிழைகள். அடுத்த பதிப்பில் சரி செய்து விடலாம்.

புத்திசாலித்தனமான கதைகள் என்னை எப்போதும் ஈர்ப்பதுண்டு. அந்த வகையில் தகவலும் திகிலும் சரியான அளவில் கலந்திருக்கும் நாவல். யாரும் தமிழில் இதுவரை சரியாகத் தொட்டுப் பார்க்காத வரலாற்றுக் கதைக்களம். Dan Brown நாவல்களைக் கொண்டாடுபவர்கள் Mathi Alaganயும் கொண்டாடலாம்.

மலேசியராக இருக்கட்டும். பக்கத்து ஊர்க்காரர் என்பது எனக்கும் பெருமைதானே. நண்பர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய நாவல். விமர்சனம்: சிங்கை எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ். ஜொகூர் & சிங்கையில் உள்ள வாசிக்கும் ஆர்வமுள்ள; புத்தக பிரியர்களுடன் இதை பகிர்ந்து கொள்ளவும்.

நிலங்களின் நெடுங்கணக்கு- நூல் அறிமுகம். 19/4/2019@7.45PM(Good Friday). Hotel BZZ, 67, Jalan Joget 8, Taman Nesa, Skudai Johor. ஏற்பாடு: ஜொகூர் செம்பருத்தி தோழர்கள்.