செப்பாங், ஜூலை 17

தேசிய வகை பண்டார் பாரு சாலாக் திங்கி தமிழ்ப்பள்ளியின் மறுசீரமைக்கப்பட்ட இணைக்கட்டடத் திறப்பு விழாவும் பள்ளியின் 70ஆம் ஆண்டின் தொடக்க விழாவும் இன்று  மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மாண்புமிகு சுகாதார அமைச்சரும் ம.இ.காவின் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

சுமார் RM 250,000 மத்திய அரசாங்கத்தின் உதவிநிதியைக் கொண்டு இப்பள்ளி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 287 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியின் இணைக்கட்டடச் சீரமைப்போடு 4 புதிய வகுப்பறைகள், ஓர் அறிவியல் கூடம், நூல்நிலையம், கலைக்கல்வி வகுப்பு, சிறிய மண்டபம் ஆகியவற்றை உட்படுத்தி மறுசீரமைக்கப்பட்டுள்லது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் கலந்து உரையாற்றிய டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்கள் இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியானது துரித அளவு மேம்பாடு கண்டிருப்பதாகவும் தரமானக் கல்வியை வழங்கி நாளுக்கு நாள் சிறந்த மாணவர்களை உருவாக்கி வரும் சீரிய பொறுப்பை ஆற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், தேசிய வகை பண்டார் பாரு சாலாக் திங்கி தமிழ்ப்பள்ளியை பொறுத்தவரையில், 70 ஆண்டுகளுக்கு முன்பு தோட்டப்புறங்களில் 6 அறைகளை மட்டும் கொண்டு செயல்படத் தொடங்கிய ஒரு பள்ளியாகும். பிறகு, தோட்டப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு இடம்பெயர்க்கப்பட்டு, காலப்போக்கில் பல உருமாற்றங்களை அடைந்து இன்று இந்நிலையை அடைந்துள்ளது. நம் நாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி துரிதமான முறையிலும், தொழில்நுட்ப வகையில் நவீனப்படுத்தப்பட்டு வருவதையும் இவை உணர்த்துகின்றன.

நாட்டில் தரமான தமிழ்ப்பள்ளிகள், தரமான தமிழ்ப்பள்ளி மாணவர்கள், தரமான தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், தரமான தமிழ்ப்பள்ளிகளின் அடைவுநிலையை உருவாக்கும் நோக்கிலேயே நாங்கள் அனைவரும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றோம். அதற்கு அரசாங்கமும் போதிய ஆதரவினையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றது. அதற்கேற்ப நாட்டிலுள்ல தமிழ்ப்பள்ளிகளும் நம் சமுதாயத்தின் நம்பிக்கைகளைப் பெற்று வருகின்றது.

தமிழ்ப்பள்ளிகளிம் மூலமாக நம் சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அவ்வகையில், தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பள்ளி வாரியக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமுதாயத் தலைவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து ஒரே சிந்தனையோடு மாணவர்களின் முன்னேற்றத்தையும் அவர்களின் அடைவுநிலையையும் மனத்தில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய நோக்கமும் வெற்றிப் பெறும், என அமைச்சர் சுப்பிரமணியம் தமதுரையில் கேட்டுக் கொண்டார்.