செமினி, பிப் 9-
செமினி சட்டமன்ற தொகுதியை வென்றெடுக்க தோழமைக் கட்சிகளுடன் ஒன்றிணைந்து அனைத்து உறுப்புகளும் பாடுபட வேண்டும் என மஇகா துணை தலைவரான டத்தோ சரவணன் கேட்டுக்கொண்டார்.
தேசிய முன்னணியின் உறுப்பு கட்சிகளுடன் தோழமை கட்சிகள் ஒன்றிணையும் பட்சத்தில் இந்த சட்டமன்ற தொகுதியை நாம் வென்றெடுக்க அதிக வாய்ப்புள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மஇகா கட்சியை பொறுத்தவரை தேசிய முன்னணியில் தோழமைக் கட்சிகளாக இந்திய சமுதாய பிரதிநிதிகளை அதிகமாகக் கொண்டிருக்கும் ஐபிஎப், மக்கள் சக்தி கட்சி  உட்பட மைபிபிபி ஆகிய கட்சிகளுடன் இணைந்து இந்திய வாக்காளர்களின் நம்பிக்கையை பெறும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இத்தொகுதியை தேசிய முன்னணி தன்வசம் கொண்டிருந்தது. கடந்த பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி இந்த தொகுதியை கைப்பற்றியது. ஆனால் நடைபெறவிருக்கும் இந்த இடைத்தேர்தலில் மீண்டும் தேசிய முன்னணி இந்த சட்டமன்றத்தை கைப்பற்றுவதற்கு வாய்ப்புள்ளதையும் சரவணன் சுட்டிக்காட்டினார்.
வெள்ளிக்கிழமை செமினி பண்டார் ரிஞ்சிங் குடியிருப்பாளர்களை சந்தித்தபோது தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ சரவணன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கப்பாளா பத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசால் மெரிகானும் கலந்து கொண்டார்.
மலாய்க்காரர்களின் வாக்குகளைப் பெறுவதற்கு அம்னோவும் பாஸ் கட்சியும் இணைந்து செயல்படுகின்றன. அதேபோல் தேசிய முன்னணியில் இந்திய சமுதாயத்தை பிரதிநிதித்து அங்கத்துவம் பெற்றுள்ள உறுப்பு மற்றும் தோழமைக் கட்சிகளும் இணைந்து பாடுபட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக மூன்று பிரதமர்களின் தலைமைத்துவத்தில் அமைச்சரவையில் பணியாற்றியதாக குறிப்பிட்ட டத்தோ சரவணன் அவர்களில் டத்தோஸ்ரீ நஜிப்தான் இந்திய சமுதாயத்தின் தலைசிறந்த பிரதமர் என வர்ணித்தார்.
தமது ஆட்சிக் காலத்தில் இந்திய சமுதாயத்தின் அடிப்படை விஷயங்களை அறிந்து கொண்டு அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டதையும் டத்தோ சரவணன் சுட்டிக்காட்டினார்.
o
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி மஇகா கட்சிக்கு சொந்தமானது என்றாலும் தேசிய முன்னணியின் வெற்றிதான் முக்கியம் என்ற ஒரே சிந்தனையில் கடந்த இடைத்தேர்தலில் தொகுதியை விட்டுக் கொடுத்தது மிக சிறந்த செயல் என ரிசால் மெரிகான் புகழாரம் சூட்டினார்.
53,257 வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக செமினி விளங்குகின்றது.  இத்தொகுதியில் இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 7000 என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர்கள் உடனான இந்த சந்திப்பு கூட்டத்தில் ஐபிஎப் கட்சியின் தேசிய தலைவர் செனட்டர் டத்தோ சம்பந்தன், மஇகா உலு லாங்காட் தொகுதி தலைவர் டாக்டர் செல்வா, அத்தொகுதியின் இளைஞர் பகுதி தலைவர் நிலவன், தகவல் பிரிவு தலைவர் விஜயேந்திரன் மத்திய செயலவை உறுப்பினர் கிருஷ்ணவேணி, மைபிபிபி உலு லாங்காட் தலைவர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நம்பிக்கை கூட்டணியை சேர்ந்த பக்தியார் முகமட் நோர், அண்மையில் காலமானதைத் தொடர்ந்து செமினி சட்டமன்றத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகின்றது.
14ஆவது பொதுத் தேர்தலில் 8,964 வாக்குகள் பெரும்பான்மையில் அவர் வெற்றி பெற்றார். தேசிய முன்னணி,  பாஸ்,  பிஎஸ்எம் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களை அவர் வீழ்த்தினார்.