சென்னை, ஜூலை 17-

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் போஸ் நிகழ்ச்சி பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்டாலும் 4 கோடி பேர் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். 15 குடும்பப் பின்னனியைக் கொண்டவர்கள் பிக் போஸ் வீட்டில் ஒரே குடும்பமாக அனுசரித்து வாழ வேண்டும் என்பது தான் இப்போட்டியின் விதிமுறை.

தமிழ் சினிமா நட்சத்திரங்களோடு பாமர கலைஞர்களும் இதில் பங்கு பெற்றனர். நிகழ்ச்சி தொடங்கிய மூன்றே நாளில் நடிகர் ஸ்ரீ உடல் நலக்குறைவு காரணமாக பிக் போஸ் வீட்டை விட்டு வெளியேறினார். முதல் வார இறுதியில் நடிகை அனுயா வெளியேற்றப்பட்டார். 2ஆவது வாரத்தில் நடிகை ஓவியா , நடிகர் கஞ்சா கருப்பு, நடிகர் பரணி ஆகியோரில் யார் வெளியேற்றப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஓவியா பிக் போஸ் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது.

பரணிக்கும் கஞ்சா கருப்பிற்கும் இடையிலான போட்டியில் ரசிகர்களின் வாக்குகளை பெறத்தவறிய கஞ்சா கருப்பு வீட்டை விட்டு வெளியேறினார். இதனிடையே, ஓவியாவை வெளியேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் அனைவரும் அவர் பெயரையே கடந்த வாரமும் முன்மொழிந்தனர். இந்த முறை ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஓவியா மீண்டும் பிக் போஸ் வீட்டில் இருப்பதை உறுதி செய்தார். இப்போட்டியில் ஜூலியானா ஆர்த்திக்கு இடையிலான போராட்டத்தில் ஆர்த்தி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

வெளியேறிய ஆர்த்தி தமது நடவடிக்கை குறித்து மக்கள் என்ன நினைத்தாலும் கவலை இல்லை என்று கூறியுள்ளார். கமல்ஹாசன் அறிவுரை செல்லும் அளவிற்கு தாம் எந்த தவறு செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, பிக் போஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவை பரணி தட்டிச் சென்றுள்ளார். நேற்று கமல்ஹாசனுடன் அவர் கலந்துரையாடியது சமூகத் தளங்களில் வைரலாகப் பரவியது. இறுதியில் பிக் போஸ் பட்டத்தை யார் வெல்வார் என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியபோது தாம் வீட்டை விட்டு வெளியேறும் போது ‘பாய்… பரணி என்று ஒரு குரல் கேட்டது. அந்த குரல் வெல்லும் என பரணி கூறினார். அந்த குரலுக்குச் சொந்தக்காரர் ஓவியா.

இந்த பிக் போஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதல் சிறுவர்கள் உட்பட பெரியவர்கள் என அனைவரும் ஓவியாவிற்கு முழுமையான ஆதரவை வழங்குகிறார்கள். குறிப்பாக சமூகத் தளங்களில் புரட்சிப் பெண்மணி ஓவியா ரசிகர் மன்றமும் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் யாரும் எதிர்பார்க்காத திருப்பத்தை ஏற்படுத்துவதுதான் பிக் போஸ் நிகழ்ச்சியின் திட்டம். அந்த வகையில் எப்போது ஓவியா தவறு செய்கிறாரோ அப்போது அதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது பொறுத்துத்தான் அவரின் வெற்றி உறுதி செய்யப்படும்.

அந்த வகையில் இந்த வாரமும் ஓவியாவை வெளியேற்ற பிக் போஸ் வீட்டில் உள்ளவர்கள் காய் நகர்த்துவது போல் முன்னோட்டக் காட்சிகள் காட்டுகின்றன. இந்த வார இறுதியில் ஓவியா, நமீதா, காயத்ரி ரகுராம், ஜூலியானா, ஆகிய மூவரில் யார் வெளியேற்றப்படுவார் என்ற முடிவு தெரியவரும்.