கப்பாளா பத்தாஸ், அக்.21—

மீட்புநிலை நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு கால கட்டத்தில் , பலரும் வியக்கும் வகையில் பினாங்கு கப்பாளா பத்தாசில் நடைபெற்ற தமிழ் திருமணம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது.

கப்பாளா பத்தாஸ் வட்டாரத்தில் நன்கு அறிமுகமான சமூக சேவகரும், மைபிபிபி தொகுதித் தலைவருமான மு. வேலாயுதத்தின் புதல்வன் ஆசிரியர் ஜனார்த்தனன் , பேரா, பாகான் டத்தோவைச் சேர்ந்த இளவரசி கலையரசுவை கரம் பற்றிய திருமணம் தமிழை முன்னிறுத்தி தமிழுக்கு மகுடம் சேர்த்துள்ளது.

மணமகன், மணமகள் இருவரும் தொடக்கக் கல்வியைத் தமிழ்ப்பள்ளியில் தொடங்கிய வேளையில் துவாங்கு பைனுன் ஆசிரியர் பயிற்சி கல்லூரியிலும் தமிழை முதன்மை பாடமாகக் கொண்டு தேர்ச்சி பெற்றனர். தமிழில் தேர்ச்சிப் பெற்றிருந்தாலும் மணமகளுக்கு பாகான் டத்தோவில் இருக்கும் தமிழ்ப் பள்ளி ஒன்றில் வேலைக் கிடைக்க, இடம் பற்றாக்குறை காரணமாக மணமகனுக்கு பூலாவ் தீக்குஸ், கான்வென்ட் பள்ளியில் வேலைக் கிடைத்தது.
தேசிய பள்ளியில் வேலை செய்தாலும் தமிழ் மீது தீரா தாகம் கொண்ட மணமகன் பல்வேறு அனைத்துலக மாநாடுகளில் தமிழ் சார்ந்த கட்டுரைகளைப் படைத்து நம் தாய்மொழிக்குப் புகழ் சேர்த்துள்ளார்.

இந்நிலையில் தமது திருமணத்தையும் தமிழ் முறைப்படி, தமிழ் நெறியோடு நடத்த வேண்டும் என்ற ஆசை கொண்டு மணமகன் ஜனார்த்தனன் அதனையும் செயல்படுத்தி வெற்றி கொண்டுள்ளார். உலக பொதுமறையான திருக்குறளைச் சாட்சியாகக் கொண்டு தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஜனார்த்தனன் தமிழ்த் திருமணம் புரிந்துள்ளார்.

மலேசியத் தமிழ்நெறி கழகப் பொறுப்பாளர்களில் மன்னர், வேலுமணி, குமரன் ஆகியோர் இந்த தமிழ்த் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி வைத்துள்ளனர். இன்றைய இளைய சமூகமும் தமிழ் மீது தீரா பற்றைக் கொண்டிருப்பதை ஜனார்த்தனன் இளவரசி திருமணம் புலப்படுத்துகிறது.

மொழிகளுக்கெல்லாம் தாயான தமிழுக்கு சொந்தக்காரர்கள் நாம்…இருமன இணைப்பையும் தமிழ் நெறியில் மரபு பாராட்டி தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி திருமணம் புரிந்த உனக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.. தமிழ் போல் வாழ்க. 🙏🙏🙏🙏 Janarthanan Velliathum Illavarasi Kalaiarasu

Posted by தயாளன் சண்முகம் on Isnin, 19 Oktober 2020
சமூகத் தளங்களில் வைரலான தமிழ்த் திருமணம்

ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந்த திருமணத்தில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டதுடன், அரசாங்கம் பரிந்துரைத்த நிர்வாக நடைமுறைகளும் சிறப்பாக பின்பற்றது. நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு கால கட்டத்தில் பெரும்பாலானோர் கூட்டத்தைக் குறைத்து திருமணம் நடத்தும் வேளையில் அதிகமான கூட்டத்திலும் நிர்வாக நடைமுறைகளை எவ்வாறு பின்பற்றப்பட வேண்டும் என்பதற்குச் சான்றாக ஜனார்த்தனன் இளவரசி திருமணம் அமைந்தது.

இளைஞர், விளையாட்டு அமைச்சரும் கப்பாளா பத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ ரீசால் மெரிக்கான் நைனா மெரிக்கான் வழங்கிய முழு ஒத்துழைப்பின் காரணமாக அம்னோ வளாகத்தில் மூவின மக்கள் கலந்து கொண்ட திருமண விருந்துபசரிப்பு சிறப்பாக நடைபெற்றது. மைபிபிபி கட்சியின் பினாங்கு மாநில தலைவர் டத்தோ லோக பாலமோகன், பொது இயக்கங்கள் உட்படச் சுற்று வட்டார மக்களின் ஆதரவுடன் ஜனார்த்தனன் இளவரசி திருமணம் சிறப்பாக நடந்தேறியது.