கோலாலம்பூர், ஜூலை 17-

மலேசிய இந்திய இளைஞர் மன்றமும், மலேசிய இளைஞர் மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்த புட்சால் போட்டி ஜூலை 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிரம்பான் 2, பப்ளிக் ஸ்டார் அரங்கில் மிக விமர்சையாக நடந்தது.

இந்தப் போட்டியில் 32 அணிகள் கலந்து கொண்டன. இதில் ஹைபெர் புட்சால் அணி வெற்றி பெற்றது. அவ்வணிக்கு 1500 வெள்ளி ரொக்கமும், சுழல்கிண்ணமும் சான்றிதழும் வழங்கப்பட்டன. 2ஆம் நிலை வெற்றியாளரான தி.ஜி.எஸ். புட்சால் அணிக்கு 1000 வெள்ளியும், 3ஆம் நிலை வெற்றியாளரான அட்ரோல் புட்சால் அணிக்கு 500 வெள்ளியும், 4ஆம் நிலை வெற்றியாளரான வெம்பாயெர் அணிக்கு 150 வெள்ளியும் வழங்கப்பட்டது.

இந்த புட்சால் போட்டியை நெகிரி செம்பிலான் குற்றத் தடுப்புப் பிரிவு தலைவர் ஏ.சி.பி. சமாட் பின் அமாட் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். குறிப்பாக இளைஞர் மன்றங்கள் இணைந்து நடத்திய இப்போட்டி தொடர வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

மலேசிய இந்திய இளைஞர் மன்றம் இது போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. இதன் மூலம் இளைஞர்களை நல்வழிப்படுத்த முடியுமென நம்புவதாக அதன் தலைவர் சிவபாலன் கூறினார். இதுபோல இன்னும் பல நிகழ்ச்சிகளையும் போட்டிகளையும் மலேசிய இந்திய இளைஞர் மன்றம் நடத்துமென அவர் நம்பிக்கை தெரிவித்தார். இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அணிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.