ஜோகூர், நவ.21-

‘2021 வரவு-செலவு அறிக்கை’ நவம்பர் 26, வியாழக்கிழமை வாக்கெடுப்பிற்கு வரும்போது, அதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கப்போகிறார்களா அல்லது எதிர்க்கப்போகிறார்களா என்று மலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) ஜோகூர் மாநிலத் தலைவர் மோகன் எல்லப்பன் வினாத் தொடுத்துள்ளார்.

இந்த நிதி நிலை அறிக்கைமீதான வாக்கெடுப்பு, உண்மையில் டான்ஸ்ரீ முகைதீனின் தலைமைத்துவத்திற்கும் அவர் தொடர்ந்து பிரதமராக நாட்டை வழிநடத்த முடியுமா என்பதற்குமான வாக்கெடுப்பாகத்தான் பார்க்கப்படுகிறது.

முகைதீன் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கத்தை வீழ்த்த அன்வார் அண்மையில் மேற்கொண்ட முயற்சியின்போது தன்னையும் இணைத்துக் கொள்ளவில்லை என்று துன் மகாதீர் இன்று(நவம்பர் 21) புகார் தெரிவித்திருக்கிறார்.

அகங்காரமிக்க தலைவர்களால் உருவான இந்தக் கொல்லைப்புற அரசாங்கத்தை வீழ்த்துவதற்குக் கிடைத்த வாய்ப்பை மலேசியர்கள் பயன்படுத்திக்கொள்ளப் போகிறார்களா அல்லது நழுவவிடப் போகிறார்களா என்பதற்கான விடை அன்று தெரியவரும்.

நாட்டில் அரசியல் நிலையற்றத் தன்மை நீடிக்கிறது. இந்த நிலையில், வரவு-செலவுத் திட்டத்திலோ அல்லது அரசாங்கத்திலோ இந்தியர்களின் பங்கு என்ன என்பது குறித்து சிந்திக்க வேண்டிய தருணமிது. நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள் அண்மையில் நிதி அமைச்சருடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின்போது, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களோ தலைவர்களோ அதில் கலந்துகொள்ளவில்லை.

தேசிய நலம் சார்ந்த கூட்டங்களில் இந்தியத் தலைவர்கள் பெரும்பாலும் ஆலோசிக்கப்படுவதில்லை. தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் நாம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டோம். அதே நிலை இன்றைய தேசியக் கூட்டணி அரசாங்கத்திலும் நீடிப்பதை கண்கூடாகப் பார்த்து வருகிறோம். அஸ்லி சமுதாய மக்களின் நிலைக்கு நாமும் தள்ளப்படுகிறோமா என்றும் மோகன் அச்சம் தெரிவித்துள்ளார்.

அப்படிப்பட்ட நிலைமைக்கு ஆளாகுமுன் இந்தியர்கள் அரசியல் விழிப்புணர்வை தாங்களாகவே வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்தியர்களுக்கான உண்மையான பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்திலும் அரசாங்கத்திலும் இடம்பெற வேண்டும். இந்திய சமுதாயம் ஒரு காட்சிப் பெட்டகமாகப் பயன்படுத்தப்படுவதை இனியும் அனுமதிக்ககூடாதென்று சமூக ஆர்வலருமான எ.மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.