மாரான், அக்டோபர் 21-
பிரசித்திப் பெற்ற மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்திற்கு, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வெ.1 லட்சம் நிதி வழங்கியிருப்பதாக ஆலயத்தின் கெளரவப் பொருளாளர் டத்தோ க.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

கொவிட்-19 நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக, பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்புக்கு வந்தது. தற்போது அது மீட்சிநிலை கட்டுப்பாட்டு ஆணையாக இருந்து வருகிறது.

இத்தகைய முடக்க நிலை அமலாக்கங்களால், மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயமும் பக்தர்களின் தரிசனத்திற்கு மூடப்பட்டு, அண்மையில்தான் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் வருகையும், நன்கொடையும் முற்றாகக் குறைந்துள்ள நிலையில், மஇகா தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ சரவணன் வழங்கியிருக்கும் வெ.1 லட்சம் நிதியானது, காலத்திற்கு ஏற்ற பெரும் உதவி நிதியாகும் என டத்தோ க.தமிழ்ச்செல்வன் கூறினார்.

ஆலயத்தின் தொடர் பராமரிப்புப் பணிகளுக்கும், சமய நடவடிக்கைகளுக்கும் இந்த நிதி பெரும் துணை புரியும் என்று குறிப்பிட்ட அவர், மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலய நிர்வாகக் குழுவின் சார்பில், டத்தோஸ்ரீ சரவணனுக்கு அவர் மனமார்ந்த நன்றியிதனை தெரிவித்துக் கொண்டார்.

இதற்கிடையில், மஇகா தேசியத் தலைவரும் முன்னாள் மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனும், மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் பிரமாண்ட வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியிருப்பதையும் தாங்கள் நன்றியோடு நினைவு கூர்வதாக டத்தோ தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டார்.

டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பிரதமராக இருந்த காலத்தில், 22 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி நிதியை டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பெற்றுத் தந்ததாக அவர் சொன்னார்.

அந்நிதியைக் கொண்டுதான் ஆலயத்தில் பல மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முன்னாள் பிரதமரிடமிருந்து அப்பெரும் நிதியைப் பெருவதற்கு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஓர் உறவுப் பாலமாக இருந்துள்ளார்.

அன்று அவர் பெற்றுத் தந்த மானியத்தால்தான், ஆலயத்தின் தோற்றமும், அடிப்படை வசதிகளும் மெருகேறியிருக்கிறது; கூடியிருக்கிறது.

இதனிடையே, ஆலயத்தின் வளர்ச்சிக்கு என்றுமே பெரும் துணையாய் இருக்கின்ற டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கும், டத்தோஸ்ரீ சரவணனுக்கும், கட்சியின் முன்னாள் தலைவர்களுக்கும் டத்தோ தமிழ்ச்செல்வன் நிர்வாகத்தின் சார்பாக மீண்டும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.