பெட்டாலிங் ஜெயா, ஆக. 15-
தேசியக் கூட்டணிக்கு முழுமையான ஆதரவு வழங்கும் தேசிய முஃபாக்கட்கூட்டணியில் இணைய மலேசிய பிரிபூமி பெர்சத்து கட்சி (பெர்சத்து) இணைவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான தான்ஶ்ரீ முகீடின் யாசின் கூறியுள்ளார்.

தேசியக் கூட்டணி தலைமையிலான அரசாங்கத்திற்குள் உள்ள கட்சிகளின் உயர்மட்ட தலைவர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அதில் பெர்சத்து கட்சியின் நிலைப்பாட்டை வலுப்படுத்த ஒப்பந்தங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக முகீடின் கூறியுள்ளார்.

”தேசியக் கூட்டணிக்கு முழுமையான ஆதரவு தெரிவிக்கும் தேசிய முஃபாக்கட் கூட்டணியில் இணைய பெர்சத்து கட்சியின் உச்ச மன்றம் ஒப்புக் கொண்டுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

”இறைவனின் ஆசியுடன் முஃபாக்கட்டில் பெர்சத்து கட்சியின் பங்கேற்பு விரைவில் உறுதி செய்யப்படும்” என்று தான்ஶ்ரீ முகீடின் சொன்னார்.

”பெர்சத்து கட்சிக்கு இது சிறந்த வழி என்று நான் நினைக்கின்றேன்.” ”தேசியக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் பாஸ், அம்னோ உட்படப் பிற கட்சிகளின் ஒத்துழைப்புடன் மக்களின் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் ” எனத் தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முஃபாக்கட் கூட்டமைப்பை பாஸ் – அம்னோ என்ற இரண்டு கட்சிகள் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.