தஞ்சோங் மாலிம் – ஆகஸ்ட் 24. 

அடுத்த பொதுத் தேர்தலில் ஐ.பி.எப். கட்சிக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி  உறுதி  கூறியதற்கு ஐ.பி.எப். தேசிய மாதர் இளைஞர் அணித் தலைவர்கள்  பெ. இராஜம்மாள் மற்றும் ச. கணேஷ்குமார் ஆகிய இருவரும் தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

சிலிம் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் வேளையில் ஐ.பி.எப் கட்சி எற்பாடு செய்த பிரச்சார நிகழ்வில் கலந்து கொண்ட டத்தோ ஸ்ரீ அகமட் ஸாஹிட், ஐ.பி.எப் தேசிய மகளிர் இளைஞர் அணித் தலைவர்கள் ஐ.பி.எப் தேசிய தலைவருக்கு செனட்டர் பதவி வழங்க வேண்டும் என்று கேட்டதற்கு. வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் ஐ.பி.எப். கட்சிக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினார்.

முன்னதாக கடந்த ஐ.பி.எப். பொதுப் பேரவையில் கலந்து கொண்ட அவர்,  ஐ.பி.எப். கட்சிக்கு பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறியதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

தேசிய முன்னணியில் உறுப்புக் கட்சியாக இணைய வேண்டுமென்பதுதான் ஐபிஎப் கட்சியின் நோக்கம். அக்கட்சியின் முன்னாள் தலைவர் காலம்சென்ற டத்தோ எம். சம்பந்தன் அதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்தார்.

இந்நிலையில் கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் ஈஜோக் தொகுதியில் ஐபிஎப் போட்டியிடுமெனப் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் இறுதியில் அத்தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் மஇகாதான் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.