Site icon அநேகன்

மாணவரை அடித்ததால் வழக்கு; ஆசிரியருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் குவியும் ஆசிரியர்கள்

பெட்டாலிங் ஜெயா, டிச. 18-
மாணவரைத் தாக்கியதற்காக சிரம்பானிலுள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டை எதிர்நோக்கியிருக்கும் ஆசிரியருக்கு ஆதரவாக நாடு தழுவிய நிலையில் பல ஆசிரியர்கள் நாளை சிரம்பானிலுள்ள அந்த நீதிமன்றத்தில் குவியவிருக்கின்றனர்.

இந்த வழக்கு பள்ளிகளில் மாணவர்களின் கட்டொழுங்கு பிரச்னையை துடைத்தொழிக்கும் முயற்சிக்கு தடையாக இருக்கும் என அவர்கள் அனைவரும் வருத்தம் தெரிவித்தனர். இவ்விவகாரம் குறித்து நெகிரி செம்பிலான், நீலாயிலுள்ள தாமான் செமாராக் தேசிய பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கூறுகையில், பலமுறை போதையைத் தரக்கூடிய பசையை சம்பந்தப்பட்ட மாணவன் முகர்ந்ததோடு பள்ளியில் சண்டையும் மற்ற மாணவர்களிடம் பகடிவதையும் புரிந்து வந்ததால் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் ஆசிரியரான அசிசான் மானாப் அந்த மாணவரிடம் கொஞ்சம் கடுமையான நடந்துக்கொள்ள நேரிட்டதாக தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட ஆசிரியரின் நோக்கம் அந்த மாணவனை சரிப்படுத்துவதே. சில பெற்றோர்களின் இத்தகைய போக்கினால் இப்பள்ளியில் மாணவர்களிடையிலான கட்டொழுங்கு பிரச்னை இன்னும் மோசமாகும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என அப்பள்ளியின் டெலிகிராம் எனப்படும் சமூகவலைத்தளத்தின் குழுவில் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. நாளை செவிமடுக்கப்படவிருக்கும் இவ்வழக்கு மிக முக்கியமானதாகும். இவ்வழக்கில் அந்த ஆசிரியர் வெற்றி பெறுவதற்கு அதிகமான ஆசிரியர்கள் வரவிருக்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமான் செமாராக் தேசிய பள்ளியில் ஆசிரியர் அசிசான் மாணவர் விவகார பிரிவின் முதிர்நிலை துணைத்தலைமையாசிரியராவார். கடந்த அக்டோபர் மாதம், மாணவரை அடித்ததற்காக குற்றவியல் சட்டவிதி செக்ஷன் 323இன் கீழ் நீதிமன்றத்தில் ஆசிரியர் அசிசான் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த ஆசிரியருக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும் 2000 வெள்ளி அபராதமும் அல்லது அவ்விரு தண்டனைகளை வழங்க வகை செய்கின்றது.

இந்த வழக்கில் ஆசிரியர் அசிசானுக்கு ஆதரவாக சமூகவலைத்தளங்களில் பிரேய் போர் சிக்கு அசிசான் (PrayForCikguAzizan) எனும் ஹேஷ்டேக் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரத்திற்கு மலேசிய தேசிய ஆசிரியர் சேவை சங்கத்தின் (என்.யூ.டி.பி)” ஆதரவு கிடைத்துள்ளது.

மேலும், நாளை நடைபெறவிருக்கும் இவ்வழக்கின் போது நீதிமன்றத்தில் ஆசிரியர்கள் வருகைபுரிந்து ஆசிரியர் அசிசானுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென அதன் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி, அக்குழு அசிசானுக்கு வழக்கறிஞரையும் ஏற்படுத்தி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version