கோலாலம்பூர், டிச. 18-
வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கத்திற்கு தலைமையேற்பது மட்டும் எங்களது எதிர்பார்ப்பு அல்ல. மாறாக, எங்களுக்கு பிரதமர் வேட்பாளர் இருப்பதாக பாஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் உதவித்தலைவர் இட்ரிஸ் அஹ்மாட் கூறுகையில், வரும் பொதுத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் எங்கள் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் பிரதமராவார் என தெரிவித்தார். எங்களுக்கு ஒரே ஒரு தலைவர்தான் இருக்கிறார். நிச்சயமாக அவர்தான் பிரதமராகுவதற்கான வேட்பாளர் என செய்தியாளரிடம் அவர் கூறினார்.
நம்பிக்கை கூட்டணியுடன் இணையாததால் வரும் பொதுத்தேர்தலில் பாஸ் கட்சி படுதோல்வியைச் சந்திக்கலாம் என கூறப்பட்டுவரும் நிலையில் பொதுத்தேர்தலில் அரசியல் அதிசயம் நடக்கலாம் என அக்கட்சியின் உதவித்தலைவர் டத்தோ முஹம்மட் அமார் நிக் அப்துல்லா கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டிருந்தது.
இறைவன் விரும்பினால் மனிதர்கள் எதிர்பார்த்திராத நிலையில் பாஸ் கட்சியின் தலைமைத்துவம் நாட்டின் பிரதமராக பதவியேற்கும் என கூறியிருந்தார். இருப்பினும், பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் யார் பிரதமர் வேட்பாளர் என்பது குறித்து அக்கட்சி இன்னும் விவாதிக்கவில்லை என புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினருமான இட்ரிஸ் அஹ்மாட் கூறினார்.
நாங்கள் முதலில் 14ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிட்டுக்கொள்கிறோம். இப்போது எதற்கு பிரதமர் வேட்பாளர் பற்றி பேச வேண்டும் என அவர் கேள்வியெழுப்பினார்.
