ஈப்போ, டிச. 18-
தனது காரில் வைத்திருந்த கைப்பையைத் திருடிய திருடன், தனது குடும்பத்திற்கு சொந்தமான தங்க காப்பை அடகு வைத்திருந்த கடையிலிருந்து மீட்டு சென்றுவிட்டதாக தேவமணி (வயது 38) எனும் இந்திய மாது தெரிவித்தார். இதனால், தமக்கு 2 ஆயிரம் வெள்ளி இழப்பு ஏற்பட்டதாக அவர் கூறினார்.
சமையல்காரராக வேலை செய்துவரும் தேவமணி கடந்த 2ஆம் தேதி ஜாலான் சிப்ளினிலுள்ள தேவாலயத்தின் முன்புறம் தன்னுடைய புரோட்டோன் சாகா ரகக்காரை நிறுத்திவிட்டு தனது கைப்பை காரின் ஓட்டுநர் இருக்கையின் கீழ் வைத்துவிட்டு அந்த தேவாலயத்திற்குள் சென்றார். பிறகு, தேவாலயத்திலிருந்து தனது காருக்கு திரும்பிய போது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அவரது காரின் ஓட்டுநர் பகுதியிலுள்ள கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததோடு அவரது கைப்பையும் திருடப்பட்டிருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
அவரது கைப்பையில் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஏ.டி.எம். அட்டைகள், கைத்தொலைப்பேசி, பணம் மற்றும் ஜாலான் சுல்தான் இஸ்கண்டாரிலுள்ள அடகுக்கடையில் வைக்கப்பட்டிருந்த தனது குடும்பத்திற்கு சொந்தமான கை காப்பின் இரசீது முதலானவை இருந்துள்ளது. இது குறித்து அவர் காப்புறுதி இழப்பீட்டை பெறும் நோக்கில் அதே நாளில் ஈப்போ போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இரண்டு நாட்கள் கழித்து அடகு வைத்த காப்பை மீட்பதற்காக அடகுக்கடைக்கு சென்ற போது அவருக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது.
தேவமணியின் கைப்பைத் திருடியவர்கள் அந்த பையில் இருந்த அடகு இரசீதைக் கொண்டு அந்த காப்பை மீட்டுள்ளனர். குறிப்பாக, ஒரு பெண் தேவமணியின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி அந்த நகையை மீட்டிருப்பதாக அந்த அடகு கடையின் பெண் ஊழியர் தெரிவித்ததாகவும் அது அக்கடையிலுள்ள சிசிடிவி காமிரா பதிவில் பதிவாகியிருப்பதாகவும் தேவமணி கூறினார்.
தற்போது, தேவமணி பேராக் மாநில ம.சீ.ச. கட்சியின் பொதுச்சேவை மற்றும் புகார் பிரிவின் அலுவலகத்தின் உதவியை நாடியுள்ளார். இது குறித்து அந்த பிரிவின் தலைவர் ஜிம்மி லோ கூறுகையில், நகைகளை அடகு வைத்தவர்கள் தங்களது நகைகளைப் பத்திரமாக மீட்பதற்கான பாதுகாப்பு அம்சங்களை அடகுகடை நிறுவனங்கள் கொண்டிருக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க அடகுக்கடை உரிமையாளர்கள் பிறரது அடையாள அட்டையைப் பயன்படுத்தி நகையை மீட்க வரும்போது அந்த அடையாள அட்டைக்கு சொந்தமானவர்களிடம் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டுமென ஜிம்மி லோ கூறினார்.
