கோலாலம்பூர், டிச. 18-
மாணவரைத் தாக்கியதற்காக சிரம்பானிலுள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் ஆசிரியருக்கு ஆதரவாக நாடு தழுவிய நிலையில் பல ஆசிரியர்கள் நாளை சிரம்பானிலுள்ள அந்த நீதிமன்றத்தில் செல்வதற்கு தடையேதும் இல்லை என கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ மாட்சீர் காலீட் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்வது அவர்களின் உரிமை. ஆசிரியர்கள் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு உரிமையுள்ளது. அவ்வாறு செய்யக்கூடாது என ஆசிரியர் நெறிமுறையில் ஏதும் இல்லை. இது மனிதர்களின் உணர்ச்சி சம்பந்தப்பட்டதாக அவர் சொன்னார்.
ஒரு கிராமத்தில் உள்ளவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால் கிராமத்தில் உள்ளவர்கள் அங்கு செல்வார்கள். அதேப்போல்தான் நமது குடும்ப உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால் நமது உறவினர்களும் அங்கு வருவார்கள் என செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நான் கருத்து ஏதும் கூறமுடியாது. காரணம், இவ்விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு வந்து விட்டது. அதனை நீதிமன்றத்தின் முடிவுக்கே விட்டு விடுகிறேன். கல்வியமைச்சிற்கு இதுப்போன்ற வழக்கு இதுதான் முதல்முறை என டத்தோஸ்ரீ மாட்சீர் காலீட் குறிப்பிட்டார்.
