Site icon அநேகன்

தென்னிந்திய நடிகர் சங்க கட்டட நிதிக்காக மலேசியாவில் வசூல் செய்வதா ? மலேசிய நாம் தமிழர் இயக்கம் கண்டனம்

கோலாலம்பூர், டிச. 18-

தென்னிந்திய நடிகர் சங்க கட்டட கடனை பூர்த்தி செய்வதற்காகவும் மற்றுமொரு கட்டடத்தை எழுப்புவதற்காக மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் விஷால் ஏற்பாட்டிலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் தலைமையிலும் மாபெரும் கலை நிகழ்வு புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெறவுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்திற்கும் மலேசிய தமிழர்களிடம் கலை நிகழ்வு ஏற்பாடு செய்து அதன் நிதி திரட்டுவது நோக்கம் என்ன என்று மலேசிய நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.அ. கலைமுகிலன் கேள்வி எழுப்பினார்.

 

இதில் வேதனையான செய்தி என்னவென்றால் 2 மணி நேரத்தில் 15,000 சீட்டுக்கள் விற்று முடிக்கப்பட்டன. மலேசிய தமிழர்களின் சினிமா மோகத்தையும் ,அடிமைத்தனத்தையும் தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களுக்கு சாதகமாக்கி கொள்வது மட்டுமில்லாமல் நிதி வேட்டையையும் தொடங்கியுள்ளனர் என்று கலைமுகிலன் தெரிவித்தார். இங்கு வேடிக்கை என்னவென்றால் , நடிகர்களிடம் இல்லாத பணமா மலேசிய தமிழர்களிடம் திரட்ட வேண்டியள்ளது? குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் அவர்களிடம் இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டே தென்னிந்திய நடிகர் சங்கம் கட்ட நிதியை தீர்த்துவிடலாம் என்றார் கலைமுகிலன். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மலேசிய தமிழர்கள் ஆதரிப்பதனால், நாளை தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசிய தமிழர்களின் சிக்கலுக்கோ அல்லது உரிமைக்காகவோ போராட போகிறார்களா அல்லது குரல் எழுப்பத்தான் போகிறார்களா, எந்த அடிப்படையில் இந்நிகழ்வை ஒருங்கிணைக்கிறார்கள் என்ற கேள்விகளை கலைமுகிலன் முன் வைத்தார்.

 

இந்நாட்டில் தமிழர்கள் தங்கள் வீட்டு திருமணங்கள், நிகழ்வுகள் நடத்துவதற்கு சீனர்கள் மண்டபத்தில் நடத்திவரும் ஒரு நிலையில் இருக்கிறோம். தமிழர்களுக்கென்று ஏதோ சில பொது மண்டபங்கள் இருந்தாலும் கூட, இன்று பெரும்பாலான தமிழர்கள் சீன மண்டபங்களைதான் நம்பி இருக்க வேண்டிய சூழல். அப்படியிருக்கையில் மலேசியாவில் தமிழர்களுக்கென்று பொது மண்டபங்களை அல்லது தமிழர் மையங்கள் உருவாக்க ஏன் மலேசிய தமிழர்கள் மும்முரம் காட்டுவதில்லை ? அல்லது தென்னிந்திய நடிகர் சங்கம் உதவுமா ?

 

அன்று வெள்ளையன் நம்மை அடிமைப்படுத்தினான், இன்று இந்த சினிமாவுக்கு நாம் அடிமையாகி நிற்கிறோம். 2 மணி நேரத்தில் பல லட்ச பணத்தை தமிழர்களால் திரட்ட முடிகிறது என்றால் நம்மால் ஏன் தமிழர்களுக்கென்று சொந்த நிலங்களும் , மண்டபங்களும் , அதன் வழி வணிகங்களும் வாங்க முடியாதா அல்லது உருவாக்க முடியாதா? சிந்தியுங்கள்! நாளையே நாங்கள் தலைநகரத்தில் ஒரு மண்டபத்தை எழுப்ப திட்டமிட்டால், இந்த கூத்தாடிகளுக்கும், சினிமாவுக்கும் கிடைத்த ஆதரவு நமக்கு கிடைக்குமா? என்று வேதனையுடன் கலைமுகிலன் தனது பத்திரிக்கை அறிக்கையில் குறிப்பிட்டார் .

 

மலேசியத்தமிழர்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் , அதாவது நாம் மலேசியர்கள் நமக்கு குடியுரிமை உள்ளது என்ற பெருமையோடு மட்டுமில்லாமல், இந்நாட்டில் நம் தமிழர்களின் பொது சொத்துடமைகளை அதிகரிக்க வேண்டும், அதுதான் நம்முடைய வலிமையை நிருபிக்கும். மலேசியாவில் , இந்த நிகழ்வை, ஒருங்கிணைக்கும் ஏற்பாட்டாளர்கள், எவ்வளவு சீட்டுக்கள் விற்க்கப்பட்டுள்ளது, எவ்வளவு நிதி திரட்டப்பட்டுள்ளது என்ற விளக்கத்தினை வழங்க முன் வர வேண்டும் . சரியான விளக்கங்கள் விளக் கப்படவில்லை என்றால், மலேசிய நாம் தமிழர் இயக்கம் மேற்நடவடிக்கை எடுக்கும் கலைமுகிலன் நினைவுறுத்தினார்.

Exit mobile version