லண்டன், டிச.19 –
மென்செஸ்டர் சிட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும், மத்திய திடல் ஆட்டக்காரர் கேவின் டி புரூனின் ஒப்பந்தத்தை நீட்டிக்க அந்த கிளப் முடிவெடுத்துள்ளது. 26 வயதுடைய கேவின் டி புரூன் கடந்த 2015 ஆம் ஆண்டில் 5 கோடியே 50 லட்சம் ஈரோ டாலர் தொகையில் ஜெர்மனியின் வோல்ஸ்பெர்க் கிளப்பில் இருந்து மென்செஸ்டர் சிட்டியில் இணைந்தார்.
ஆறு ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் கேவின் டி புரூன் இணைந்தார். தற்போது 2024 ஆம் ஆண்டு வரை அவரின் ஒப்பந்தத்தை நீட்டிக்க மென்செஸ்டர் சிட்டி எண்ணம் கொண்டுள்ளது. வாரம் ஒன்றுக்கு 2 லட்சம் ஈரோ டாலரை கேவின் டி புரூன் சம்பளமாகப் பெறுகிறார். அதனை இரட்டிப்பாக்க மென்செஸ்டர் சிட்டி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்த பருவத்துக்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி 16 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது. அந்த சாதனைக்கு கேவின் டி புரூனும் முக்கிய பங்கை ஆற்றியுள்ளதால் அதனை அங்கீகரிக்கும் வகையில் ஒப்பந்த நீட்டிப்பை வழங்க மென்செஸ்டர் சிட்டி முடிவு செய்துள்ளது.
