Site icon அநேகன்

10 வயது மகள் பாலியல் வன்கொடுமை : தந்தைக்கு 18 ஆண்டுச் சிறை

கோத்தா பாரு, டிச. 19-

கடந்த செப்டம்பர் மாதத்தில், தனது 10 வயது மகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 50 வயது ஆடவனுக்கு 18 ஆண்டுச் சிறைத் தண்டனை மற்றும் 10 பிரம்படிகள் விதிக்கப்பட்டன.  தனது குற்றத்தை அந்த நபர் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவனுக்கு அத்தண்டனை விதிக்கப்படுவதாக செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அகமட் பஸ்லி பஹ்ரூடின் தெரிவித்தார்.

பாச்சோக் என்ற பகுதியில் உள்ள வீடொன்றில், கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதியன்று, 10 வயது நிரம்பிய அந்தச் சிறுமியை, அந்தச் சிறுமி உட்பட எட்டு பிள்ளைகளுக்குத் தந்தையான அந்த நபர் இரவு 9.30 மணியிலிருந்து 11.15 மணி வரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளான் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தனது முன்னாள் மனைவியுடன் தங்கியிருந்த தனது மகளை தன்னுடன் வந்து தங்குமாறு அந்த ஆடவன் அழைத்திருக்கிறான். ஆனால், அந்தச் சிறுமி அவனுடன் செல்ல மறுத்து விட்டார். அப்பாவுடன் போ என்று அச்சிறுமியின் தாயார் வலியுறுத்தியைத் தொடர்ந்து, அவள் அவனுடன் அவன் வீட்டிற்குச் சென்றார்.

அன்றிரவு 11.30 மணிக்கு, அந்த ஆடவன், தனது மகளை தனது முன்னாள் மனைவியின் வீட்டில் விட்டுச் சென்றான். வீடு திரும்பிய அந்தச் சிறுமி, வழக்கத்திற்கு மாறாக செயல்பட்டதைக் கண்ட அந்தச் சிறுமியின் தாயார், என்ன நடந்தது என்று வினவினார். தனது தந்தை தன்னை கற்பழித்து விட்டதாகவும், அது முதன்முறை அல்ல என்று அந்தச் சிறுமி கூறியதைக் கேட்டு, அந்தத் தாயார் அதிர்ச்சியில் உறைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த அக்டோபர் 22-ஆம் தேதியன்று, அந்தச் சிறுமியை மீண்டும் தன்னுடன் அழைத்துச் செல்ல அந்த ஆடவன் முற்பட்ட போது, அவனுடன் தன் மகளை தாம் அனுப்பவதாக இல்லை என்று கூறி, அச்சிறுமியின் தாயார் அச்சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

Exit mobile version