லண்டன், டிச.20 –
இங்கிலாந்து லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதி ஆட்டங்களில் மென்செஸ்டர் சிட்டியும், அர்செனலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. செவ்வாய்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 4 – 3 என்ற பினால்டி கோல்களில் லெய்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது. அதேவேளையில் அர்செனல் 1 – 0 என்ற கோலில் வெஸ்ட் ஹேம் யுனைடெட் அணியைத் தோற்கடித்தது.
எத்திஹாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி நிர்வாகி பெப் குவார்டியோலா தனது முதன்மை அணியில் 9 ஆட்டக்காரர்களுக்கு ஓய்வு வழங்கியிருந்தார். அவரின் வியூகம் மென்செஸ்டர் சிட்டிக்கு பெரும் பின்னடைவை கொண்டு வந்தது. 26 ஆவது நிமிடத்தில் பெர்னார்டோ சில்வா போட்ட கோலின் மூலம் மென்செஸ்டர் சிட்டி 1 – 0 என்ற கோலில் முன்னணி வகித்தது.
இருப்பினும் 90 ஆவது நிமிடத்தில் ஜேமி வார்டி போட்ட கோலினால் லெய்செஸ்டர் சிட்டி ஆட்டத்தை சமப்படுத்தியது.கூடுதல் நேர ஆட்டத்திலும் இரண்டு அணிகளும் கோல் போடாததால், பினால்டி வழங்கப்பட்டது. இதில் மென்செஸ்டர் சிட்டி கோல் காவலர் கிலாவ்டியோ பிராவோ , ரியாட் மாஃஹ்ரேசின் பினால்டியை தடுத்து நிறுத்தி வெற்றியை உறுதிச் செய்தார்.
இதனிடையே எமிரெட்ஸ் அரங்கில் வெஸ்ட் ஹேம் யுனைடெட் அணியை வீழ்த்துவதில் அர்செனல் கடும் சவாலை சந்தித்தது. 42 ஆவது நிமிடத்தில் டேனி வெல்பேக் போட்ட ஒரே கோல், அர்செனல் அணியின் வெற்றியை உறுதிச் செய்தது.
