Site icon அநேகன்

வட மாகாண தமிழர்களுக்கு உதவிகள் வழங்கப்படும்! நஜீப் உறுதி

கொழும்பு, டிச. 20-
இலங்கை இராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இடையிலான போரில் பாதிக்கப்பட்ட பகுதியான வட மாநிலத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை கண்டறிய சிறப்பு குழுவை மலேசியா யாழ்ப்பாணத்திற்கு அனுப்பும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் உறுதியளித்தார்.

இலங்கைக்கு மூன்று நாள் அலுவல் பயணத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் நஜீப், அப்பயணத்தின் ஒரு பகுதியாக தமிழர்கள் வாழும் வடமாநிலத்திற்கு வருகை புரிந்தார். தொடர்ந்து, மரியாதை நிமித்தமாக வட மாநில முதல்வரான சி.வி. விக்னேஸ்வரனைச் சந்தித்து பேசினார்.

இலங்கைத் தமிழர்களின் தாய்வீடாக விளங்கிவரும் வட மாநிலம், போரின் பாதிப்பிலிருந்து இன்னமும் மீட்சி பெறாமல் இருந்து வருகிறது. போரில் கணவர்கள் இறந்து விட்டநிலையில் கிட்டத்தட்ட 45 ஆயிரத்திற்கும் அதிகமான தனித்து வாழும் தாய்மார்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்கள்தான் குடும்பத்திற்காக சம்பாதிக்கும் ஒரே ஜீவனாகவும் இருக்கிறார்கள் என பிரதமர் நஜிப் சொன்னார்.

யாழ்ப்பானத்திற்கு மலேசியா ஒரு தூதுக் குழுவை அனுப்பி வைக்கும் என்று அவர்களிடம் தெரிவித்துள்ளேன். அந்தக் குழுவில் அரசாங்க அதிகாரிகள், தனியார் துறையினர், குறிப்பாக, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மலேசியர்கள் இந்தக் குழுவில் இடம்பெறுவார்கள் என்று டத்தோஸ்ரீ நஜிப் கூறினார்.

போரில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகலில் எத்தகைய உதவிகளைச் செய்ய முடியும் என்பதை கண்டறியும் பணியில் இந்தக் குழு ஈடுபடும். மேலும், சிறுதொழில் கடன்கள், பொது வீடுகள் போன்ற அம்சங்களில் உதவிகள் தேவைப்படும் நிலை இருப்பதை வட மாநில முதல்வர் விக்னேஸ்வரன் தம்மிடம் சுட்டிக்காட்டியதாகவும் பிரதமர் நஜிப் கூறினார்.

Exit mobile version