Site icon அநேகன்

தீபாவளிக்கு தளபதி 62 – டுவிட்டரில் ஏ.ஆர். முருகதாஸ் சூசகம் !

தளபதி விஜய்யும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸூம் மூன்றாவது முறையாக கூட்டணி சேரும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது.   இன்னும் பெயரிடப்படாத விஜய்யின் தளபதி 62 படம் தீபாவளிக்கு திரையிடப்படும் என இயக்குனர் முருகதாஸ் தமது டுவிட்டரில் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி 2012 ஆம் ஆண்டிலும் கத்தி 2014 ஆம் ஆண்டிலும் தீபாவளிக்கு திரை கண்டதுடன் மாபெரும் வசூல் படங்களாக வெற்றி பெற்றன. இந்நிலையில் கடந்த ஆண்டில் தீபாவளிக்கு திரைக்கு வந்த மெர்சல் திரைப்படமும் பாக்ஸ் ஆபிசை அதிர வைத்தது.

விஜய்யும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸூம் மூன்றாவது முறையாக கூட்டணி சேரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமான் இசையமைக்கிறார். பைரவா படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் இந்தபடத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

பிரம்மாண்டமாக தயாராக உள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்குகிறது. இந்நிலையில் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது. நடிகர் விஜய் கிளேப் போர்டை அடித்து படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தார். மகிழ்ச்சியில் ஆழ்ந்த விஜய் ரசிகர்கள் #தளபதி62 என்ற ஹெஷ்டேக்கை ஆரம்பித்து டிரெண்ட் செய்துவருகின்றனர்.

முதல் கட்டமாக சென்னையில் 30 நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள முருகதாஸ் ஏனைய காட்சிகளை கொல்காத்தாவில் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டில் தீபாவளிக்கு ஏற்கனவெ தல அஜித்குமாரின் விசுவாசம், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவின் 36 ஆவது படங்கள் திரைக் காணவிருப்பதாக அதன் தயாரிப்பாளர்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் தளபதியின் 62 ஆவது படமும் தீபாவளிக்கு வரவிருப்பதால் இந்த ஆண்டில் தீபாவளி திருநாளில் திரையரங்குகள் களைக் கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version