Site icon அநேகன்

சந்திர கிரகணத்தில் ஆலயங்களின் நடை மூடப்பட வேண்டும்! -இந்து அமைப்புகள் திட்டவட்டம்

கோலாலம்பூர், ஜன.19-

வரும் ஜனவரி 31ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச நாளன்று சந்திர கிரகணம் ஏற்படவிருப்பதால் அன்று ஆலயங்களில் கிரகண நேரத்தில் ஆலய நடைகள் மூடப்பட வேண்டுமென இந்து அமைப்புகள் திட்டவட்டமாக தெரிவித்தன.

இது குறித்து மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ மோகன் ஷாண் கூறுகையில், நம் நாட்டில் காலம் காலமாக கிரகண காலக்கட்டத்தில் ஆலயங்களுக்கு திருக்காப்பு போடப்படுகின்றது. ஆனால், இம்முறை சந்திர கிரகணம் தைப்பூச நாளன்று வருவதால் இது பெரும் விவகாரம் ஆகியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

தைப்பூச நாளில் மாலை மணி 7.48 முதல் இரவு 11.41 மணி வரையில் சந்திர கிரகணம் ஏற்படவிருப்பதாக இந்து பஞ்சாங்கங்கள் கூறுவதால் அந்நேரத்தில் ஆலய நடைகள் மூடப்பட வேண்டும். இந்த காலக்கட்டத்தில் ஆலயத்தில் பூஜைகள் நடந்தாலோ அல்லது பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை செய்தாலோ பல்வேறு பிரச்னைகள் மனிதர்களுக்கு ஏற்படும் என இந்து ஆகமங்கள் தெரிவிப்பதாக மலேசிய இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைமையகத்தில் இன்று மலேசியாவிலுள்ள இந்து அமைப்புகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறினார்.

கிரகண காலத்தில் ஆலயங்கள் மூடப்பட வேண்டும் என்பதை காலா காலம் மலேசியாவில் பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்தியா, சிங்கப்பூர் உள்பட பல நாடுகளில் இந்து ஆலயங்கள் மூடப்படுகின்றன. ஆனால், மலேசியாவில் மட்டும் கிரகண நேரத்தில் ஆலயத்தை மூடுவது சர்ச்சையாகிவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட சிவஸ்ரீ முத்துக்குமார குருக்கள், சத்பிரகாஷ் ஆனந்த சரஸ்வதி முதலானோர் இந்து ஆகமத்தில் உத்தரகாமிக்கா ஆகமம், மனு ஸ்மர்த்தி உள்ளிட்ட ஆகமங்களில் கிரகண நேரத்தில் ஆலய நடைகள் மூடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவது குறித்து விளக்கம் அளித்தனர். இந்து ஆலயங்களின் கோபுரங்களில் கலசங்களைக் கொண்டு இருப்பதால் கிரகண காலங்களில் அதன் வீச்சுகள் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.

அண்மையில், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ எம். சரவணன், கிரகண விவகாரம் தொடர்பில் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். மற்ற சமயங்களிலும் இதுப்போன்ற காலக்கட்டங்களில் பல்வேறு தடைகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அவர் ஆய்வு செய்தாரா? என மோகன் ஷாண் கேள்வியெழுப்பினார்.

கிரகண காலத்தில் ஆலயங்களில் பூஜைகளோ அல்லது நேர்த்திக்கடன்களைச் செய்யக்கூடாது. அதற்கு பதிலாக ஆலயத்தில் பக்தர்கள் அமைதியாக தியானம், மந்திரத்தை மனதினுள் வாசிக்கலாம்.

மேலும், தைப்பூச நாளில் பக்தர்கள் இந்து சங்கம் வெளியிட்டுள்ள வழிகாட்டி கையேடுகளைப் பின்பற்ற வேண்டும். அதோடு, பக்தர்கள் எத்தகைய காவடிகளையும் கொண்டு வரலாம் என அண்மையில் வெளியாகியிருக்கும் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், இது மீண்டும் பாராங்கத்தி, சுருட்டு உள்ளிட்ட முருகனின் வழிபாட்டிற்கு சம்பந்தமில்லாத பொருட்களை பக்தர்கள் ஆலயத்திற்கு கொண்டுவர வழி வகுக்கும் என மோகன் ஷாண் எச்சரித்தார்.

Exit mobile version