முன்னதாக குடியரசுத் தலைவராக பதவியேற்க வந்த ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி மாளிகையின் முன் பகுதியில் உள்ள மைதானத்துக்கு ராணுவ செயலர் உள்ளிட்டோரால் அழைத்து வரப்பட்டார். பின் ராம்நாத் கோவிந்தும், முந்தைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் பாரம்பரிய பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ காரில் நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அங்கு இருவரையும் மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவை தலைவராக உள்ள துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின் அவர்கள் நாடாளுமன்ற மைய மண்டபத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்திற்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவிப் பிரமாண நிகழ்ச்சி முடிந்ததும் குடியரசுத் தலைவர் மாளிகையின் பாதுகாவலர்கள் ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் செல்வர். பின் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி மாளிகையை ராம்நாத் கோவிந்திற்கு சுற்றிக் காட்டுவார். அதை தொடர்ந்து டில்லி ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள புதிய இல்லத்திற்கு பிரணாப் முகர்ஜியை அழைத்துச் சென்று ராம்நாத் கோவிந்த் வழியனுப்பி வைப்பார் என குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 17 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 20-ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமாரைவிட அதிக வாக்குகள் பெற்று ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற்றார். மொத்தமுள்ள 10 லட்சத்து 98,882 வாக்குகளில் 5.50 லட்சத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்று ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றிருந்தார். இதையடுத்து நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்று கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
