ஈப்போ, பிப். 12-
வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் புந்தோங் தொகுதியை ம.இ.கா. வெல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆகையால், அந்த தொகுதியை மைபிபிபி கட்சிக்கு ஒரு போதும் விட்டுத்தர மாட்டோம் என பேராக் மாநில மஇகா தொடர்பு குழுத் தலைவர் டத்தோ வி. இளங்கோ திட்டவட்டமாக தெரிவித்தார்.
புந்தோங் தொகுதி கடந்த பொதுத்தேர்தலில்தான் முதல்முறையாக மஇகாவிற்கு வழங்கப்பட்டது. அந்த தேர்தலில் நாங்கள் தோல்வி கண்டாலும் இம்முறை அதனை மீட்டெடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம் என அவர் கூறினார்.
இது மஇகாவிற்கு வழங்கப்பட்ட தொகுதி. இதில் மஇகா வேட்பாளர்தான் நிச்சயமாக நிறுத்தப்படுவார் என்ற நம்பிக்கையில் கட்சி பணிகளை ஆற்றி வருகிறோம். இத்தொகுதியில் மஇகா தலைவர்கள் எவ்வித ஆர்ப்பாட்டங்களும் இன்றி அமைதியான முறையில் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். இந்த தொகுதி மட்டுமின்றி மஇகா மற்றும் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடக்கூடிய தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவதற்கான சேவையை ஆற்றி வருகிறோம்.
ஆகையால், தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் எந்த ஒரு உறுப்புக் கட்சிகளுக்கும் இந்த புந்தோங் சட்டமன்றத் தொகுதியை ம.இ.கா. விட்டுக் கொடுக்காது. மேலும், இந்த தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்பதை பிரதமர் நஜீப்பும் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியமும்தான் முடிவெடுப்பார்கள்.
நாட்டில் இந்தியர்களை அதிகம் கொண்ட தொகுதிகளில் புந்தோங் தொகுதியும் ஒன்றாகும். இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் கட்சி என்ற அடிப்படையில் அத்தொகுதியில் மஇகாவே போட்டியிடும் என டத்தோ இளங்கோ குறிப்பிட்டார்.
இதற்கு முன்பு புந்தோங் தொகுதியில் மைபிபிபிதான் போட்டியிடவிருப்பதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

