கோலாலம்பூர், மே 14-
கடந்த பொதுத்தேர்தலில் அப்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு ஆதரவு தெரிவித்ததற்காக ஏர் ஆசியா குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டோனி பெர்னாண்டஸ் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து இன்று பங்குச் சந்தையில் ஏர் ஆசியா குழுமத்தின் பங்குகள் 10 விழுக்காடுகள் வரையில் சரிந்தது.
பொதுத்தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த டோனி பெர்னாண்டஸ் தனது நிறுவனம் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தார்.
அதன் மறுநாள், தேசிய முன்னணியின் தேர்தல் சுலோகம் மற்றும் சின்னம் பொறிக்கப்பட்ட ஏர் ஆசியா விமானத்தின் முன்பு டோனி பெர்னாண்டஸுடன் நஜீப் எடுத்துக்கொண்ட படம், விமானத்தினுள் நஜீப்புடன் டோனி இருக்கும் படம் ஆகியவற்றை நஜீப் தனது முகநூல், டுவீட்டர் ஆகிய பக்கங்களில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், காணொளி ஒன்றை மீண்டும் வெளியிட்டிருந்த டோனி பெர்னாண்டஸ் நஜீப்பும் தேசிய முன்னணியும் கொடுத்த அழுத்தத்தால் கடந்த பொதுத்தேர்தலில் அக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தாக கூறியிருந்தார். வாக்களிப்பதற்காக மக்கள் செல்லும் வகையில் சலுகை விலையில் பயண சேவையை அறிவித்தது, நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த ஏர் ஆசியா எக்ஸ் தலைவர் டான்ஸ்ரீ ரபிடா அசிஸை நீக்க தேசிய முன்னணி வலியுறுத்தி அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதால் தாம் இந்த ஆதரவை வழங்க நேரிட்டதாக டோனி பெர்னாண்டஸ் கூறியிருந்தார்.
இதன் காரணமாக, இன்று பங்கு சந்தையில் ஏர் ஆசியாவின் பங்குகள் 10 விழுக்காடுகள் குறைந்த பிறகு மீண்டும் சீராகி அதிகரிக்க தொடங்கியதாக ரியூட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

