கோலாலம்பூர், மே 14-
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் மீண்டும் கணபதி ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். 2013ஆம் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் இடம்பெற்ற கணபதிராவ் பல துரித நடவடிக்கைகளில் ஈடுபட்டார். குறிப்பாக ஆலயம், மறு குடியேற்றம், சமூக இயக்களுக்கான மானியங்களை அவர் தொடர்ந்து வழங்கி வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக டத்தோஶ்ரீ அஸ்மின் அலி பொறுப்பேற்றார். இதனிடையே இன்று அறிவிக்கப்பட்ட ஆட்சிக்குழுவில் 10 பேர் இடம்பெற்றுள்ளார்கள்.
டத்தோ தெங் சாங் கிம், அமிரூடின், கணபதி ராவ், ஹனிஸா தல்ஹா, எங் சியூ ஹான், டாக்டர் ஷாஹருடின், ஹீ லோய் சியான், டாக்டர் சித்தி மரியா, இஸாம், டத்தோ ரஸிட் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.
2008ஆம் ஆண்டு ஆட்சிக்குழுவில் பிகேஆரின் சேவியர் ஜெயகுமார் இடம்பெற்றார். 2013 ஆண்டு ஜசெகவின் கணபதிராவ் நியமனம் பெற்றார். இந்நிலையில் இம்முறை பிகேஆர் கட்சி வேட்பாளர் தான் நியமிக்கப்படுவார் என்ற ஆரூடம் எழுந்தது. ஆனால் மீண்டும் கணபதிராவ் ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது சிலாங்கூர் வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.
இன்று சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா முன்னிலையில் கணபதிராவ் உள்பட அனைத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களும் பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

