Site icon அநேகன்

14ஆவது பொதுத் தேர்தலும் மஇகாவும்…

(டினேஷ்வரன் டி.ராஜகோபாலு)

9.5.2018 அன்று நடந்து முடிந்த மலேசிய பொதுத் தேர்தலில் எத்தகைய முடிவு பெறப்பட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இதுவரையில் இல்லாத அளவிற்கு போட்டியிட்ட 9 நாடாளுமன்ற தொகுதிகளில் 2ஐயும் 18 சட்டமன்ற தொகுதிகளில் 3ஐயும் மட்டுமே தக்கவைத்து படுதோல்வியை மஇகா தழுவியது.

மஇகா செய்த தவறு என்ன?

ஒரு காலத்தில் ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களின் அபிமானத்தைப் பெற்றிருந்த கட்சியாக மஇகா திகழ்ந்தது. அதே அளவு ஆதரவை ஏன் மஇகாவால் இப்போது பெற முடியவில்லை?

2014 முதல் இந்திய சமூகத்தின் நம்பிக்கையை மஇகா கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வந்தது. மஇகா மீது கொண்டிருக்கும் அவநம்பிக்கையை மலேசிய இந்தியர்கள் வெளிப்படையாகத் தெரிவித்தனர். 14ஆவது பொதுத் தேர்தலில் மஇகாவை இந்தியர்களின் பிரதிநிதியாக ஏற்காமல் முழுவதுமாக புறக்கணித்துள்ளனர்.

14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னர், மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் (டத்தோ சுப்ரா) 5 நாடாளுமன்றம், 7 சட்டமன்ற தொகுதிகளை வெல்வோம் என்று உறுதியளித்தார். 1.1 மில்லியன் இந்திய வாக்காளர்கள் அதாவது 65% சதவீதத்தினர் மஇகாவை ஆதரிப்பதாக அறிவித்தார்.

அவர் தலைமையேற்ற பிரதமர் துறையின் இந்திய சமூகப் பொருளாதார மேம்பாட்டு பிரிவு, செடிக்கின் வாயிலாக 2014 முதல் 2017 வரை சுமார் 502,246 இந்தியர்களுக்கு மொத்தம் 230 மில்லியன் வெள்ளி அளிக்கப்பட்டதாக டத்தோ சுப்ரா கூறினார். யார் இந்த 502,246 இந்தியர்கள்? செடிக்கின் நிதியுதவி எவ்வாறு அவர்களைச் சென்றடைந்தது? ஏன் அவர்களது வாக்குகள் மஇகாவுக்கு கிடைக்கவில்லை?

இந்திய சமூகத்திற்கான சிறப்பு பணிப்படை (SITF) இந்திய சமூகம் எதிர்நோக்கும் பலதரப்பட்ட பிரச்சினைகளைக் களைவதற்காகத் தொடங்கப்பட்டது. இந்திய சமூகத்தில் ஊடுருவியுள்ள பிரச்சினைகளுக்கு SITF தீர்வைக் கண்டதா? எத்தனை பிரச்சினைகளை அது முழுமையாக தீர்த்து வைத்துள்ளது?

எண்ணற்ற செயற்குழுக்களையும் கோடிக்கணக்கான மானியத்தையும் உட்படுத்தியும் கூட மஇகாவால் மக்களின் நம்பிக்கையையும் அபிமானத்தையும் பெற முடியவில்லை. மக்களின் தேவைகளை, எதிர்ப்பார்ப்புகளை அறியாமல் தாந்தோன்றித்தனமாகக் கட்சித் தலைமை முன்னெடுத்த முடிவுகளே இந்தப் படுதோல்விக்கு காரணம்.

மக்களின் பார்வையில் அவர்களின் நலம் காக்க மஇகா செய்ல்படும் என்ற நம்பிக்கை மட்டுமே இருந்து வந்தது. ஆனால், மக்கள் நலனை புறந்தள்ளி கட்சி உறுப்பினர்கள் நலனை முன்னிருத்தி மக்களின் அதிருப்தியை மஇகா அதிகரித்துக் கொண்டது. மஇகா மக்களின் குரலாக ஒலித்திருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் இந்திய மக்கள் சார்ந்த எத்தனை பிரச்சினைகளுக்கு மஇகா குரல் எழுப்பியது? 13ஆவது பொதுத் தேர்தலில் மக்களுக்கு கொடுத்த எல்லா வாக்குறுதிகளையும் மஇகா நிறைவேற்றியதா?

கட்சி உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே போதுமானது அல்ல. மஇகா தோற்றுவிக்கப்பட்டதின் நோக்கத்தை அறிந்து செயல்பட வேண்டும். மக்கள் சேவையையே முன்னிறுத்தி இருக்க வேண்டும். ஆனால் மஇகா அக்கடமையை நிறைவேற்றவில்லை.

GE14இன் வேட்பாளர் நியமனமே மஇகாவின் தொய்வுச் சிந்தனை வெளிக்காட்டுகிறது. அதிகமான இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறிய டத்தோ சுப்ரா, ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்ட அதுவும் இரு தேர்தல்களில் தோல்வியுற்ற வேட்பாளர்களை எல்லாம் தேர்தலில் களமிறக்கினார். இது மஇகாவில் தரமிக்க, வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்கள் இல்லை எனும் சூழலை உருவாக்கியது. அவ்வளவு மோசமான தலைவர்களையா மஇகா கொண்டுள்ளது?

முன் நகர்வு; புதிய, மேம்பட்ட மஇகா

இன்றைய மஇகா தலைமைத்துவம் மலேசிய இந்தியர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளது எனும் உண்மையை முதலில் கட்சித் தலைமை முழுமனதாக ஏற்க வேண்டும். முழுமையான, அதிகபட்ச சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதோடு, கட்சியில் அடிப்படை நோக்கத்திற்கொப்ப அனைத்து ‘குறைகளும் களையப்பட வேண்டும்.

நீண்ட காலம் பதவியில் இருப்பவர்கள் இளையோருக்கு வழிவிட்டு கட்சிப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும்.
கட்சியில் திறமைமிக்க, ஆக்கப்பூர்வமான அதிகமான இளைஞர்கள் உருவெடுத்துள்ளனர். இத்தகையோருக்கே கட்சியை வழிநடத்துவதற்கான முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

கட்சிக்குள் அரசியல் செய்பவர்களுக்கும் செயலாற்றாதவர்களுக்கும் இடம் தரப்படக் கூடாது.  இது காலத்தின் கட்டாயம், மஇகாவை மீண்டும் அதன் வசந்தகாலத்திற்கு நாம் இட்டுச் செல்ல வேண்டும்!

இது கட்சிமேல் நான் கொண்டுள்ள அளவுகடந்த நேசத்தால் பேசியதாகும். என் சிறு வயது முதல் நான் கண்டு வளம்பெற்ற கட்சி, இன்று என்னை ஒரு மக்கள் நிகராளியாக உருவாக்கிய கட்சி, அதை விட்டுக் கொடுக்க எனக்கு மனமில்லை. இறுதி வரையில் கட்சிக்காக துணை நிற்பேன். இது தாமதம் அல்ல. அவசியமான, ஆக்கப்பூர்வமான மாற்றங்களை மேற்கொண்டால், நிச்சயம் மக்களின் நம்பிக்கையை மஇகா மீண்டும் பெற முடியும்!

இந்த கட்டுரையானது ம.இ.கா.வின் முன்னாள் மத்திய செயலவை உறுப்பினரும் நெகிரி செம்பிலான் மாநில முன்னாள் மஇகா தொடர்புக் குழுத் தலைவருமான டத்தோ ராஜகோபாலுவின் புதல்வர் டினேஷ்வரனின் தனிப்பட்ட கருத்து. அது அநேகனின் நிலைப்பாடு அல்ல. ஆசிரியர்.

Exit mobile version