புத்ராஜெயா, மே 14-
2018ஆம் ஆண்டு பொய் செய்தி தடுப்பு சட்டத்தை அகற்றும் நிலைப்பாட்டிலிருந்து நம்பிக்கைக் கூட்டணி மாறாது என புதிதாக நிதியமைச்சராக அறிவிக்கப்பட்டிருக்கும் லிம் குவான் எங் தெரிவித்தார்.
இந்த சட்டத்திற்கு தெளிவான வரையரை கொடுக்கப்படும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியிருப்பது குறித்து கேள்வியெழுப்பப்பட்ட போது, நம்பிக்கைக் கூட்டணி அந்த சட்டத்தை அகற்றும் முடிவில் உறுதியாக இருப்பதாக அவர் கூறினார்.
இது குறித்து நாளை துன் மகாதீரிடம் பேசுவேன். அவரும் நம்பிக்கைக் கூட்டணியின் முடிவில் உறுதியாக இருப்பார் என தாம் நம்புவதாக ஜோர்ஜ்டவுனிலுள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜ.செ.க. பொதுச்செயலாளருமான லிம் குவான் எங் குறிப்பிட்டார்.
இப்பொழுது நாங்கள் அரசாங்கத்தைக் கைப்பற்றினாலும் நாங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள முடியாது. உண்மை அடிப்படையில் செய்திகள் இருக்க வேண்டும். நாம் ஒன்றை உண்மை என கூறினால் அது உண்மையாகிவிடாது. அதே போன்று, நாம் பொய் என கூறும் விவகாரங்களும் பொய் ஆகி விடாது. 1எம்.டி.பி. ஊழலை மூடுவதற்காக இதற்கு முந்தைய தேசிய முன்னனி அரசாங்கம் பொய் செய்திகள் தடுப்பு சட்டத்தை கொண்டு வந்ததாக லிம் குவான் எங் கூறினார்.

