Site icon அநேகன்

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கான பிரேசில் அணியை அறிவித்தார் தித்தே !

ரியோ டி ஜெனிரோ, மே.15 —

2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பங்கேற்க விருக்கும் பிரேசில் கால்பந்து அணியை அதன் பயிற்றுனர் தித்தே திங்கட்கிழமை அறிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் காயம் அடைந்த தாக்குதல் நட்சத்திரம் நெய்மாரை, தித்தே பிரேசில் அணியில் இணைத்துக் கொண்டுள்ளார். அதேவேளையில் ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் , கிண்ணத்தை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக பிரேசில் விளங்கும் என தித்தே மேலும் தெரிவித்தார்.

ஆறாவது முறையாக உலகக் கிண்ணத்தை வெல்ல பிரேசில் இலக்கு கொண்டுள்ளதாக தித்தே தெரிவித்தார். பிரேசில் வெளிப்படுத்தும் தாக்குதல் ஆட்டம் நிச்சயம் கிண்ணத்தைப் பெற்றுத் தரும் என தாம் நம்புவதாக தித்தே கூறினார்.  பிரேசில் அணியில் நெய்மார் மீண்டும் இடம்பெறுவது அந்த அணியை மேலும் வலுவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காயம் அடைந்த நெய்மார் இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் கால்பந்து விளையாட்டுக்கு திரும்புவார் என பிரேசில் கால்பந்து அணியின் மருத்துவர்  ரோட்ரிகோ லாஸ்மார் தெரிவித்தார்.

எனினும் பி.எஸ்.கி கால்பந்து கிளப்பின் தற்காப்பு ஆட்டக்காரர் டானி ஆல்வேஸ் காயம் காரணமாக  பிரேசில் அணியில் இடம்பெறவில்லை. வரும் ஜூன் 3 ஆம் தேதி குரோஷியாவை சந்திக்கும் பிரேசில், ஜூன் 10 ஆம் தேதி ஆஸ்திரியா அணியை நட்புமுறை ஆட்டத்தில் சந்திக்கவுள்ளது.

2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கான பிரேசில் அணி : 

கோல் காவலர்கள் : அலிசோன் ( ஏ.எஸ் ரோமா / இத்தாலி ), கசியோ ( கொரிந்தியன்ஸ்/ பிரேசில் ), எடேர்சன்( மென்.சிட்டி/ இங்கிலாந்து)

தற்காப்பு ஆட்டக்காரர்கள் : டானிலோ ( மென்.சிட்டி/ இங்கிலாந்து ), பாக்னர் ( கொரிந்தியேன்ஸ்/ பிரேசில் ), மார்செலோ ( ரியல் மாட்ரிட்/ ஸ்பெயின் ) , பிலிப்பே லுவிஸ் ( அத்லேட்டிக்கோ மாட்ரிட் / ஸ்பெயின் ) , மிரான்டா ( இண்டர் மிலான் / இத்தாலி ), மார்கினோஸ் ( பி.எஸ்.ஜி / பிரான்ஸ் ), தியாகோ சில்வா ( பி.எஸ்.ஜி / பிரான்ஸ் ) கெரோமெல் ( கிரிமியோ / பிரேசில் )

மத்திய திடல் ஆட்டக்காரர்கள் : காஸ்மிரோ ( ரியல் மாட்ரிட் / ஸ்பெயின் ), பெர்னான்டின்ஹோ ( மென்.சிட்டி / இங்கிலாந்து ) , பாவ்லின்ஹோ ( பார்சிலோனா / ஸ்பெயின் ), பிரேட் ( ஷக்தார் டொனெட்ஸ்க் / உக்ரேன் ), ரெனாத்தோ அகுஸ்தோ ( பெய்ஜிங் குவோன் / சீனா ), பிலிப்பே கோத்தின்ஹோ ( பார்சிலோனா / ஸ்பெயின் ),  விலியன் ( செல்சி / இங்கிலாந்து ), டக்லஸ் கோஸ்தா ( யுவன்டஸ் / இத்தாலி )

தாக்குதல் ஆட்டக்காரர்கள் : நெய்மார் ( பி.எஸ்.ஜி /பிரான்ஸ் ) , ரோபேர்ட்டோ பிர்மின்ஹோ ( லிவர்பூல் / இங்கிலாந்து ),, தைசன் ( ஷக்தார் டொனெட்ஸ்க் / உக்ரேன் ), கப்ரியல் ஜீசஸ் ( மென்.சிட்டி / இங்கிலாந்து ) 

 

Exit mobile version