Site icon அநேகன்

அரச அமைப்புகளை சீர்த்திருத்தம் செய்யும் செயற்குழுவில் அம்பிகா சீனிவாசன்

கோலாலம்பூர், மே 15-
14ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்த கையோடு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முதலாவது நடவடிக்கையாக புத்ராஜெயா ஆலோசனை மன்றத்தை அமைத்தார். நாட்டின் நிதி வளம் முதலானவைக் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் வகையில் இந்த மன்றத்திற்கு முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் ஜைனுடின் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், புதிய அரசாங்கம் பொருளாதாரம் மற்றும் நிதித்துறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரும் வகையில் புத்ராஜெயா ஆலோசனை மன்றம் இன்று அரசாங்க அமைப்புகளை சீர்த்திருத்தம் செயற்குழுவை அறிவித்துள்ளது.

அரசாங்க அமைப்புகளில் உருமாற்றத்தைக் கொண்டு வராமல் எதிர்பார்க்கப்படும் பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வர முடியாது. இதன் காரணமாக, இந்த அரச அமைப்புகளை சீர்த்திருத்தம் செய்யும் செயற்குழு அமைக்கப்படுவதாக அந்த மன்றம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

இந்த மன்றத்தில் உறுப்பினர்களாக தேசிய மனித உரிமை சங்கத்தின் தலைவரும் முன்னாள் பெர்சே தலைவருமான டத்தோ அம்பிகா சீனிவாசன், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டத்தோ கே.சி.வோரா, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் மனித உரிமை ஆணையத்தின் தலைவருமான (சுஹாக்காம்) மா வேங் க்வாய், தேசிய நாட்டு பற்றாளர் சங்க தலைவர் (பாட்ரியோட்) பிரிகேடியர் ஜெனரல் (பி) முகமட் அர்ஷாட் ராஜி, அரசியலைப்பு நிபுணர் மற்றும் சட்ட விரிவுரையாளருமான ஷாட் சலிம் பாருக்கி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆயினும், இந்த செயற்குழுவிற்கான சிறப்பு பணி வரையரை இன்னும் தெரிவிக்கப்படவில்லை. அரச அமைப்புகளை சீர்த்திருத்தம் செய்வது தொடர்பில் இந்த செயற்குழு வழங்கும் ஆய்வறிக்கை புத்ராஜெயா ஆலோசனை மன்றத்திடம் சமர்பிக்கப்படும். அதன் பின்னர், அந்த அறிக்கை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டிடம் வழங்கப்படும் என கூறப்படுகின்றது.

Exit mobile version