Site icon அநேகன்

துன் ராவுஸ் ஷாரிப், டான்ஸ்ரீ அப்துல் கனி பட்டேலை சந்தித்தார் துன் மகாதீர்!

புத்ராஜெயா, மே 15-
நாட்டின் தலைமை நீதிபதி துன் முகமட் ராவுஸ் ஷாரிப், முன்னாள் சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கனி பட்டேல் ஆகியோரை பிரதமர் துன் மகாதீர் இன்று புத்ராஜெயாவிலுள்ள பெர்டானா அறவாரிய கட்டடத்தில் சந்தித்தார்.

260 கோடி மற்றும் எஸ்.ஆர்.சி இண்டர்நேஷ்னல் தொடர்பான சிறப்பு விசாரணை குழுவிற்கு அப்துல் கனி பொறுப்பேற்றிருந்த போது உடல் நல காரணமாக அவருக்கு பதில் டான்ஸ்ரீ முகமட் அபாண்டி அலி சட்டத்துறை தலைவராக பொறுப்பேற்றார். அப்துல் கனி இந்த விசாரணை குழுவிற்கு பொறுப்பேற்றிருந்த காலக்கட்டத்தில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மீது குற்றம் சாட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ராவுஸ் ஷாரிப்பும் கனி பட்டேலும் தனித்தனியாக மாலை மணி 2.40 அளவில் பெர்டானா அறவாரியத்திற்கு வந்தனர்.

நேற்று, நம்பிக்கைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் ஹனிப்பா மைடின், ராவுஸ் தனது தலைமை நீதிபதி பதவியிலிருந்து நீக்கபடுவதற்கு முன்னர் அல்லது மத்திய அரசியலைப்பு சட்டத்திற்கு விரோதமாக அவர் தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டது தொடர்பில் விசாரணையை தொடங்குவதற்கு முன்னராக அவர் தாமாகவே அப்பொறுப்பிலிருந்து விலக வேண்டுமென கூறியிருந்தார்.

14ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து துன் மகாதீர் சட்டத்துறை தலைவர் அபாண்டி அலியை கடுமையாக சாடி வந்ததோடு 1எம்.டி.பி. விவகாரத்தில் அபாண்டி ஆதாரங்களை மறைத்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். அதுமட்டுமின்றி, அவர் விடுமுறையில் செல்ல வேண்டுமென துன் மகாதீர் உத்தரவிட்டார்.

Exit mobile version