புத்ராஜெயா, மே 15-
புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசாங்க அமைப்புகளை சீர்த்திருத்தம் செய்யும் செயற்குழு 2018ஆம் ஆண்டின் பொய் செய்தி தடுப்பு சட்டத்தை அகற்றப்படுவதில் முக்கியத்துவம் அளிக்கும் என அதன் உறுப்பினரும் தேசிய மனித உரிமை சங்கத்தின் தலைவரும் முன்னாள் பெர்சே தலைவருமான டத்தோ அம்பிகா சீனிவாசன் தெரிவித்தார்.
இன்று காலையில் பி.எப்.எம். வானொலிக்கு அளித்த நேர்க்காணலில் புத்ராஜெயா ஆலோசனை மன்றத்தின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் அரசாங்க அமைப்புகளை சீர்த்திருத்தம் செய்யும் செயற்குழுவில் தாம் இடம்பெற்றுள்ளதை அவர் கூறியிருந்தார்.
இந்த செயற்குழுவில் தனது பொறுப்பை பிறகு கூறுவதாக கூறிய அம்பிகா, பொய் செய்தி தடுப்பு சட்டம் முழுமையாக அகற்றப்பட வேண்டுமென அந்த நேர்க்காணலில் கூறினார். அந்த சட்டம் எந்த சூழ்நிலையில் அங்கீகரிக்கப்பட்டது என்பது எங்களுக்கு தெரியும். அந்த சட்ட இருக்க வேண்டியதற்காக காரணங்கள் ஏதும் இல்லை. இந்த செயற்குழு முழுமையாக அமைக்கப்பட்ட பிறகு, நடப்பில் இருக்கும் சட்டங்கள் ஆய்வு செய்யப்படும். அந்த பட்டியலில் பொய் செய்தி தடுப்பு சட்டம் எங்களின் முதன்மையானதாக இருக்கும்.
பக்காத்தான் ஹராப்பான் இதற்கு முன்னர் அந்த சட்டம் குறித்து ஆய்வு செய்யப்படும் என கூறியிருப்பதோடு நீண்ட கால அடிப்படையிலான நோக்கம் அடிப்படையில் என்னிடம் பேசியுள்ளது. அதனால், இந்த சட்டம் எங்களது திட்டத்தில் முதலாவது விவகாரமாக இல்லையென்றால் எனக்கு அதிர்ச்சியாக இருக்குமென அம்பிகா சீனிவாசன் கூறினார்.
இந்த அரசாங்க அமைப்புகளை சீர்த்திருத்தம் செய்யும் செயற்குழுவில் அம்பிகாவுடன் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டத்தோ கே.சி.வோரா, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் மனித உரிமை ஆணையத்தின் தலைவருமான (சுஹாக்காம்) மா வேங் க்வாய், தேசிய நாட்டு பற்றாளர் சங்க தலைவர் (பாட்ரியோட்) பிரிகேடியர் ஜெனரல் (பி) முகமட் அர்ஷாட் ராஜி, அரசியலைப்பு நிபுணர் மற்றும் சட்ட விரிவுரையாளருமான ஷாட் சலிம் பாருக்கி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

