கோலாலம்பூர், ஆக. 28-
இந்தியாவிற்கான விசா கட்டணம் அதிகரித்திருப்பது பாமர மக்களை வெகுவாக பாதித்துள்ளது. அதனால், இவ்விவகாரத்திற்கு உடனடி தீர்வு அவசியம். குறிப்பாக, மலேசியாவுக்கான இந்திய தூதரகம் விசா கட்டணத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என பினாங்கு மாநில 2ஆம் முதல்வர் பேராசிரியர் ராமசாமி வலியுறுத்தினார்.
6 மாத விசா கட்டணத்திற்கு பதிலாக ஒரு ஆண்டு விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், 465 வெள்ளிக்கு விசாவிற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பது மிகப்பெரிய தொகை என அவர் குறிப்பிட்டார். சிலர் தங்களின் வாழ்க்கையிலேயே ஒரு முறை மட்டுமே இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் அவர்களிடம் அதிகம் பணம் வசூலிப்பது நியாயமற்றது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த விசா கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பில் இந்திய தூதரகம் வழங்கும் விளக்கம் தமக்கு மனநிறைவு அளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
மறுஆய்வு செய்து விசா கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பது குறித்து தமது சார்பில் மலேசியாவுக்கான இந்திய தூதரகத்திற்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பப்படும் என அவர் தெரிவித்தார். ஒஐசி விண்ணப்பம் செய்தால் விசா பெற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ஒஐசியை பெற 1,200 வெள்ளி கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது.
பாமர மக்களுக்கு பாதிப்பு வரும் எந்த விவகாரத்தையும் தாம் ஏற்றுக் கொள்வதில்லை என அவர் கூறினார். விசா கட்டணம் முறை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் இன்னமும் தீர்க்கமான பதில் இல்லை. கூடிய விரைவில் இந்திய தூதரகம் விசா கட்டணத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என பேராசிரியர் ராமசாமி வலியுறுத்தினார்.

