கோலாலம்பூர், செப். 9
மனிதவளம் அடுத்த இலக்கை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிட்டது. எதிர்காலச் சவால்களை நாம் அறிந்து கொள்ளத் தவறினால், நாட்டின் மேம்பாட்டில் பின் தங்கி விடுவோம் என ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா நினைவுறுத்தினார்.
தொழில்துறையில் மாற்றம் ஏற்படவிருக்கின்றது. இன்னும் 7 ஆண்டுகளில் அதாவது 2025ஆம் ஆண்டில் அனைத்து துறைகளிலும் ரோபோட்களின் பங்களிப்புதான் அதிகமாக இருக்கப்போகின்றது. அப்போது மனிதவளம் மிகக் குறைவாகவே தேவைப்படும். ஆனால் உயர்நிலை சிந்தனை ஆற்றல் கொண்ட மனிதவளம் மட்டுமே அப்போதைய தேவையாக இருக்கும். அதை அறிந்து நமது பிள்ளைகளை உயர்நிலை சிந்தனை கொண்டவர்களாக உருவாக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த தொழில்முறை மாற்றம் ஒரு துறையில் மட்டும் நடக்கப்போவதில்லை. அனைத்து துறைகளிலும் இந்த மாற்றம் நிச்சயம் நடக்கும். அனைத்தும் ரோபோட் மயமாகும் என்பதை நாம் இப்போதே உணர வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
கல்வியில் சிறந்து விளங்குவது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் உயர்நிலை சிந்தனை கொண்டவர்களாக இருப்பதுதான். தேர்வில் ஒரு கேள்வியை அணுகும் போது, பதில் அளிப்பதில் மட்டும் குறியாக இருக்கக்கூடாது. அந்த கேள்வியில் முன்வைக்கப்பட்டுள்ள உயர்நிலை சிந்தனை என்ன என்பதை அறிவது மிக முக்கியமென சுரேன் கந்தா வலியுறுத்தினார்.
2020ஆம் ஆண்டு தொழில்முறை 4.0 கட்டம் கட்டமாக செயலாக்கம் காணும். பின்னர் அடுத்த 5 ஆண்டுகளில் அதாவது 2025ஆம் ஆண்டு அனைத்தும் எந்திரமாயமாக அதிக வாய்ப்பு உள்ளது. அதற்கேற்ப உயர்நிலை சிந்தனை ஆற்றல் கொண்டவர்களாக மாணவர்கள் உருமாற வேண்டுமென ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் நடத்திய கான்டிவா லீக் பயிற்சியில் சிறந்த அடைவுநிலையைப் பதிவு செய்த மாணவர்களுக்காக நடந்த பரிசளிப்பு விழாவிற்கு முன்னதாக தலைமையுரை ஆற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கான்டிவா லீக் பயிற்சி 20 வாரங்கள் நடந்தது. இதில் ஒவ்வொரு வாரமும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இது அவர்களை பிடி௩ தேர்வுக்கு தயார்படுத்தும் நோக்கத்தில் தொடக்கப்பட்டதாக சுரேன் கூறினார். இதில் பிடி3 மாணவர்கள் கலந்து கொண்டு பலனடைந்தார்கள். இந்த தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற 3 மாணவர்களுக்கு 3 முதன்மை பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் 3 மாணவர்கள் ஒரே நிலையில் தேர்ச்சி பெற்றனர். இதனால் அந்த மூவருக்கும் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. இதில் மிரிநாளினி சுப்ரமணியம் முதல் பரிசை வென்றார். அவருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. இரண்டாம் நிலையில் வெற்றி பெற்ற ஸ்ருதிஸ்யா ஆனந்தனிற்கு சம்சோங் டேப்பும், 3ஆம் நிலை வெற்றியாளரான சூரியா ராஜேந்திரனுக்கு லெனோவா டேப்பும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள் மாணவர்கள் என 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

