கோலாலம்பூர், செப். 9
தமது வீடுகளிலிருந்து எம்ஏசிசி எனப்படும் ஊழல் தடுப்பு ஆணையம் கைப்பற்றிய பணம் யாவும் அம்னோவுக்குச் சொந்தமானது என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
தமது வழக்கறிஞர்கள் அதனைப் பெற சம்பந்தப்பட்ட அதிகார மையத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவர் என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் குறிப்பிட்டார்.
தேர்தல் காலங்களில் தொகுதிகளுக்கும் கிளைகளுக்கும் பணத்தை வழங்கும் வழக்கம் கட்சியில் நெடுங்காலமாக இருந்து வந்தது. அது பிரதமர் துன் டாக்டர் மகாதீர், கட்சித் தலைவராக இருந்த காலத்திலும் இருந்தது நஜீப் குறிப்பிட்டார்.
2003ஆம் ஆண்டு பதவி விலகியபோது, தமக்குப் பின் வந்த துன் அப்துல்லா படாவியிடம் வெ. 140 கோடியை தாம் ஒப்படைத்ததாக முன்பு ஒரு முறை டாக்டர் மகாதீர் குறிப்பிட்டிருந்ததை நஜீப் சுட்டிக்காட்டினார்.
14ஆவது பொதுத்தேர்தலில் அம்னோ அதிர்ச்சியளிக்கும் வகையில் தோல்வியடைந்த பின்னர், பிரதமர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் கோலாலம்பூரில் தமது அடுக்ககத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்ததாக அவர் சொன்னார்.
அந்தப் பணத்தை என்ன செய்யலாம் என தீர்மானிக்கும் முன்னர், போலீஸ் அந்த அடுக்ககத்தை சோதனையிட்டு அங்கிருந்த பணத்தைக் கைப்பற்றி எடுத்துச் சென்றதாக நஜீப் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். பணத்தை பெவிலியன் அடுக்ககத்திற்கு மாற்றிய விஷயம் மர்மமாக நடத்தப்படவில்லை என்பதால், அது போலீசாருக்குத் தெரிந்த ஒன்றே எனவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் துறையின் பாதுகாப்பு அதிகாரிகள் 14ஆவது பொதுத்தேர்தல் தினத்தன்று இரவில் கொள்ளையிட்டுச் சென்ற வெ. 3.5 மில்லியன் பணத்தைப் பற்றி விசாரிக்க நஜீப் அழைக்கப்படுவார் என எம்ஏசிசி அறிவித்த பின்னர் நஜீப் இவ்வாறு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஜூன் மாதம், வர்த்தகக் குற்றப் புலனாய்வு இலாகவின் இயக்குநர் அமார் சிங் கூறுகையில், பெவிலியன் அடுக்ககத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தைச் சொந்த கொண்டாட யாரும் முன்வரவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

