Site icon அநேகன்

பத்மநாப சுவாமியின்  புகழ் பாடும் ஒடிசி நடனம்!

கோலாலம்பூர், செப். 10-

உலகின் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் கேரளா பத்மநாப சுவாமியின் திருக்கோவிலில் 6 கீர்த்தனைகளை ஒருங்கிணைத்து ஒடிசி நடனத்தை படைக்க மலேசியாவின் முன்னணி கலைஞரான சந்தியா மனோஜ் தயாராகி வருகிறார்.

உலகத்தில் பணக்கார ஆலயங்களில் ஒன்றாக இந்த பத்மநாப சுவாமி ஆலயம் விளங்குகின்றது. பல அதியசங்களையும் மர்மங்களையும் ஆன்மிக சக்திகளையும் உள்ளடக்கிய இந்த ஆலயத்தின் புகழை மலேசியர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இந்த ஒடிசி நடனம் அமையுமென சந்தியா மனோஜ் கூறினார்.

கேரளா திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி ஆலயம் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதோடு இந்த ஆலயத்திற்காகவே கீர்த்தனைகளும் உருவாக்கப்பட்டது. அந்த கீர்த்தனைகளை இன்றளவும் இந்த ஆலயத்தில் வழிபாடு நடைபெறும் போது, பாடி வருகிறார்கள். அதில் உள்ள 6 கீர்த்தனைகளை ஒருங்கிணைத்து, பத்மநாப சுவாமியின் புகழை உணர்த்தும் வகையில் இந்த ஒடிசி நடனம் அரங்கேறவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

குறிப்பாக 5 பாடல்கள் சமஸ்கிருதத்திலும், ஒரு பாடல் இந்தியிலும் இடம்பெறும். இங்குள்ளவர்களும் இந்த கீர்த்தனைகளை அறிந்து கொள்ள வேண்டுமென்ற முறையில் இந்த ஒடிசி நடனம் அமையும். நடனத்திற்கிடையில் பத்மநாப சுவாமி ஆலயம் குறித்து விளக்கமும் வழங்கப்படும்.

பத்மநாப சுவாமி ஆலயத்தில் மகா விஷ்ணு பள்ளி கொண்டிருக்கும் காட்சியை அப்படியே ரசிகர்களின் பார்வைக்கு கொண்டு வரவும் முடிவு செய்துள்ளோம். ஓவியத்தின் மூலமாக பத்மநாப சுவாமியின் தரிசனத்தையும் நிகழ்ச்சிக்கு வருகை புரியும் பார்வையாளர்கள் பெறலாம் என சந்தியா தெரிவித்தார்.

அண்மையில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால், அங்குள்ள பொதுமக்கள் பல்வேறான சிக்கல்களை எதிர்நோக்கி வருகிறார்கள். அவர்களுக்கு உதவி புரியும் நோக்கத்தையும் நாம் கொண்டுள்ளோம். இந்த நிகழ்ச்சியிலிருந்து திரட்டப்படும் நிதியிலிருந்து கேரள வெள்ள நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகளாவிய நிலையில் சந்தியா மனோஜ் பல்வேறு நிகழ்ச்சிகளைப் படைத்துள்ளார். பரதத்தில் தொடங்கி தற்போது ஒடிசியில் உச்சத்தை தொட்டுள்ளார். இவரது நடனத்தை காண்பதற்கு ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்த முறை பத்மநாப சுவாமி திருக்கோவிலின் புகழை எடுத்துரைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமையவிருப்பது கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகா விஷ்ணுவின் தசாவதாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஒடிசி நடனம் தொடங்கி பின்னர் அமைதி எனப்படும் மோட்சத்துடன் நிறைவடையும். 2 மணிநேரம் இடைவிடாது நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சந்தியா மனோஜ் மட்டுமே தனி ஆளாக நடனமாடவிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 11ஆம் தேதி கோலாலம்பூர் நுண்கலைக் கோவிலில் (Temple Of Fine Arts) நடைபெறவுள்ளது. மேல் விவரங்களுக்கு 017-−3677962 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Exit mobile version