கோலாலம்பூர், செப். 11
பாவ் கடையில் எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை சேவை வரி விதிக்கப்பட்டது குறித்து தாம் எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சர் லிம் குவான் எங் அலட்சியப்படுத்துவது ஏன் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சோங் மாலிமில் உள்ள ஒரு பாவ் கடையில் தமக்கு வழங்கப்பட்ட ரசீதை தமது முகநூலில் இடம் பெறச் செய்து இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
தயாரிப்பாளர்களுக்கு மட்டும்தான் எஸ்எஸ்டி விதிக்கப்படும், பயனீட்டாளர்களுக்கு அந்த வரி இல்லை என்றுதான் கூறப்பட்டது அவ்வாறு இருக்கும்போது பயனீட்டாளராக இருக்கும் தமக்கு ஏன் 6 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது என அவர் கேட்டார்.
முன்பு பாவுக்கு 6 விழுக்காடு ஜிஎஸ்டி எனப்படும் பொருள் மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டது. அதே போல 6 விழுக்காடு எஸ்எஸ்டியும் விதிக்கப்படுகிறது என லிம் கூறியிருந்தார். அதே வரி நடைமுறை இருக்கும் என்றால் நாம் எதற்கு வேறு மாதிரியான வரி முறைக்கு மாற்ற வேண்டும் என்றும் நஜீப் கேட்டார்.
ஜி.எஸ்.டி. அகற்றப்பட்டுள்ள நிலையில் பொருட்களின் விலை குறையவில்லை. அக்கடையில் வாங்கிய குளிர்பானத்திற்கும் 6 விழுக்காடு வரி விதிக்கப்பட்டிருக்கிறது என்று நஜீப் சொன்னார்.
மொத்தமாக அந்த கடையில் 16 விழுக்காடு வரியை செலுத்தியிருக்கிறேன். 6 விழுக்காடு ஜிஎஸ்டி வரியுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும் என்று அவர் சொன்னார்.

