கோலாலம்பூர், செப். 15
மற்ற நாடுகளை போன்று முதியோரைப் பராமரிக்கும் திட்டங்களையும் வழிமுறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் தற்போது வருமானம் இல்லாமல் பரிதவிக்கும் வயதானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் இந்தத் திட்டம் அவசியம் என்று அவர் தெரிவித்தார்.
தற்போது அமலில் இருக்கும் ஈபிஎப் எனப்படும் தொழிலாளர் சேம நிதி வயதான காலத்தில் உதவியாக இருக்கும் என்றாலும் அது போதுமா என்ற கேள்வி எழுகிறது.
அதோடு, ஆதரவற்றோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் அரசாங்கம் அதற்கான திட்டத்தையும் வகுக்கும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
சராசரியாக மக்கள் 75 வயது வரை வாழ்வதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வேலையிலிருந்து ஓய்வு பெற்றோர் குறைந்தது 15 முதல் 20 ஆண்டுகள் வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆய்வில், ஓய்வு பெற்றவருக்கு மாதமொன்றுக்கு வெ. 800 தேவைப்படுவதாகவும் அவர் 75 வயது வரை வாழ்ந்தால் குறைந்தது வெ. 196,000லிருந்து வெ.200,000 வரை தேவைப்படும் என்றும் மகாதீர் குறிப்பிட்டார்.
எனவே இது சம்பந்தமாக ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் காப்புறுதித் திட்டம் போன்று ஒரு திட்டத்தை ஒய்வு பெறுவதற்கு முன்னர் அம்மாதிரியான திட்டத்தை தொடக்கலாமா என்ற கருத்தும் வரவேற்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.

