மென்செஸ்டர், டிச.21 –
மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர்கள் மீண்டும் தங்களின் கால்பந்து விளையாட்டை ரசித்து விளையாட வேண்டும் என அந்த கிளப்பின் இடைக்கால நிர்வாகி ஒலே கன்னர் சோல்ஸ்க்ஜயர் தெரிவித்துள்ளார். ஜோசே மொரின்ஹோவின் நிர்வாகத்தின் கீழ், தங்களின் ஆட்டத்திறன் பாதிக்கப்பட்டதாக கருதும் ஆட்டக்காரர்கள், தங்களின் முழுத் திறமைகளையும் வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டில் மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி பொறுப்பை ஏற்ற, ஜோசே மொரின்ஹோ கடந்த செவ்வாய்கிழமை நீக்கப்பட்டார். இதனையடுத்து மென்செஸ்டர் யுனைடெட்டின் முன்னாள் ஆட்டக்காரர் ஒலே கன்னர் சோல்ஸ்க்ஜயர், இடைக்கால நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் மைக் பீலன், துணை நிர்வாகியாக பொறுப்பேற்றிருக்கிறார்.
இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியில் மிகப் பெரிய சரிவைக் கண்டிருக்கும் மென்செஸ்டர் யுனைடெட்டை, மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதுடன் அந்த கிளப்பிற்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுப்பதே தமது முக்கிய குறிக்கோள் என அவர் தெரிவித்தார். கால்பந்து விளையாட்டு ஒரு வர்த்தகம் போன்றது. இதில் வெற்றிகள் மட்டுமே கணக்கிடப்படுவதாக சோல்ஸ்க்ஜயர் கூறினார்.
எனவே ஆட்டக்காரர்களை சுதந்திரமாக விளையாட அனுமதிப்பதன் மூலம் அவர்கள் தங்களின் முழுத் திறனையும் வெளிப்படுத்துவார்கள். இது அணிக்கு மேலும் வலு சேர்க்க உதவும் என சோல்ஸ்க்ஜயர் மேலும் தெரிவித்தார். டிசம்பர் மாத இறுதியிலும், ஜனவரி மாத தொடக்கத்திலும் மென்செஸ்டர் யுனைடெட் அதிகமான ஆட்டங்களில் பங்கேற்கவிருப்பதால் அனைவரின் ஆட்டத்தையும் தம்மால் மதிப்பிட முடியும் என்று அவர் கூறினார்.

