கோலாலம்பூர், டிச. 21
பிகேஆர் தேசிய உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகிய தமது மகள் நூருல் இசாவின் முடிவை பிகேஆர் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்காத்துப் பேசியுள்ளார்.
இந்த முடிவு குறித்து தாமும் நூருலும் விரிவாக விவாதித்தோம். அது பற்றிய விவரங்களை வெளியிடும் நிலையில் தாம் இல்லை என்றும் அவர் கூறினார்.
கடந்த 9 மாதங்களாக நீடிக்கும் அரசியல் நிலவரங்களை தாம் அறிவதாகவும் மக்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக சிலர் அரசியல் விளையாட்டில் கவனம் செலுத்துகின்றனர் என்றும் அன்வார் சுட்டிக் காட்டினார்.
தங்கள் அரசியலை காப்பாற்றிக் கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் கட்சி மாறியதால் மக்களிடையே ஏற்பட்டிருக்கும் மனநிலையை அவர் உதாராணமாகக் காட்டினார்.
பெரும்பான்மையில் நூருல் தேசிய உதவித் தலைவராக தேர்வு பெற்ற போதிலும் அவர் பதவி விலகியிருக்கிறார். மாநில தொகுதித் தலைவர்களில் பெரும்பான்மை முடிவு அடிப்படையில் பினாங்கு பிகேஆர் தலைவராகவும் நூருல் நியமிக்கப்பட்டிருந்தார் என்று அன்வார் கூறினார்.
நூருல் முடிவு கட்சிக்கு மட்டும் பேரிழப்பு அல்ல. மாறாக, நாட்டிற்கும் இழப்புதான். எனினும் அவருடைய முடிவை கட்சி உறுப்பினர்களும் மலேசியர்களும் மதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

