Site icon அநேகன்

ஜோகூர் மாநில கலைஞர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம்

கோலாலம்பூர், டிச. 21
மலேசிய இந்திய கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தொடங்கப்பட்ட மலேசிய இந்திய கலைஞர்கள் சங்கம் ஜோகூர் மாநில கலைஞர்களுக்காக மிகப்பெரிய விருது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

முழுக்க முழுக்க ஜோகூர் மாநிலத்தை தாய் நிலமாகக் கொண்ட மலேசிய கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மலேசிய இந்திய கலைஞர்களின் ஜோகூர் மாநில தலைவர் சிவகுமாரன் தெரிவித்தார்.

பிப்ரவரி 2ஆம் தேதி ஜோகூர் குலாய், ஜி குவான் உணவகத்தில் இந்த மாபெரும் விருது நிகழ்ச்சி நடைபெறுகின்றது. விருந்துடன் கூடிய இந்த விருது நிகழ்ச்சியில் மலேசியக் கலைஞர்கள் திரளாக கலந்து கொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

ஜோகூர் மாநில மலேசிய இந்திய கலைஞர்கள் சங்கத்தை பொருத்தவரையில் இங்குள்ள கலைஞர்களின் நலத்திற்காக பலதரப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ளோம். குறிப்பாக மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற பாடகர்கள் அல்லது கலைத்துறையில் உள்ள கலைஞர்கள் சுகாதார ரீதியில் பாதிக்கப்பட்டால் அவர்களை உடனுக்குடன் சந்தித்து உதவி வழங்கி வருகின்றோம்.

ஜோகூரில் மிகவும் புகழ்பெற்ற மணிமாறன் அண்மையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்காக ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்தி 40 ஆயிரம் வெள்ளியை திரட்டினோம்.

அவரைப் போல இங்குள்ள பல கலைஞர்களுக்கு தொடர்ந்து உதவிகளை நாம் வழங்கி வருகிறோம். அதுமட்டுமின்றி திரைப்படத் துறையில் கால் பதிக்க வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில சங்கம் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு ஆதரவு வழங்கி வந்துள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய கலைஞர்களின் திரைப்படங்கள் அல்லது பாடல் வெளியீட்டு விழாக்கள் நடைபெறும்போது அதற்கு நேரடியாக சென்று ஆதரவு வழங்கி இருக்கின்றோம். ஒவ்வொரு திரைப்படத்தையும் திரையரங்கில் கண்டு அந்த திரைப்படத்தை குறித்த விமர்சனங்களை முகநூலில் பகிர்ந்து படத்திற்கு விளம்பரம் தேடித் தந்துள்ளோம். அந்த வரிசையில் மாநில கலைஞர்களை அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விருது நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது என சிவகுமாரன் தெரிவித்தார்..

கடந்த ஆண்டு சங்கத்தின் சார்பாக தேசிய நிலையில் சூப்பர் ஸ்டார் பாடல் திறன் போட்டி நடைபெற்றது. முன்னதாக மாநில ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டார்கள். இந்தப் போட்டி மலேசிய கலைத்துறை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்த விருது விழாவில் மாநில ரீதியில் நடத்தப்பட்டு பிறகு தேசிய நிலையில் நடைபெறும் என மலேசிய இந்திய கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் விஜய் கூறினார்.

ஜோகூர் மாநில ரீதியில் நடைபெறும் முதல் விருது விழாவில் 42 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இசை, திரைப்படம், பொழுதுபோக்கு என மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக பொழுதுபோக்கு சார்ந்த விஷயத்தில் சிறப்பாக 21 விருதுகள் வழங்கப்படுகிறது

மலேசிய இந்திய கலைஞர் சங்கத்தை பொருத்தவரை ஆண்டுதோறும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதுவரையில் 1000 பேர் இந்த சங்கத்தில் இணைந்து உள்ளதாக விஜய் தெரிவித்தார்.

ஆடல், பாடல், நகைச்சுவை என மிகச்சிறந்த ஒரு விருது விழாவாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மாலை 4 மணி தொடங்கி 6 மணி வரை சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அதனை தொடர்ந்து 6 மணி தொடங்கி இரவு 11 மணி வரை விருது விழா நடைபெறும் என விஜய் கூறினார்.

ஜோகூர் மாநிலத்தை பொறுத்தவரை மலேசியாவின் முன்னணி இசைக் கலைஞர்களான டத்தின்ஸ்ரீ ஷைலா நாயர், டாக்டர் பெர்ன் ஆகியோர் ஜோகூர் மாநிலத்தில் பிறந்தவர்கள். அவர்களும் இந்த நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்படுவார்கள். இவர்களைப் போல கலைத் துறையில் சாதித்த மற்றும் சாதிக்கத் துடிக்கும் இளைய சமுதாயத்திற்கு புத்துயிர் அளிக்கும் வகையில் இந்த விருது நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் கலைஞர்கள் பெருமளவில் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Exit mobile version