கோலாலம்பூர், டிச.24-
பயணிகளின் விமானப் போக்குவரத்துப் பயண அடிப்படையில் வரும் 2019இல் ஆசியானின் மிகப் பெரிய விமான நிறுவனமாக ஏர் ஆசியா உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விமானப் போக்குவரத்துத் தலைமை ஆய்வாளரும் ஆசியானின் தலைமைப் பிரதிநிதியுமான பிரெண்டன் சோபி தெரிவித்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக ஏர் ஆசியா தொடர்ந்து விரைவானப் போக்குவரத்து சேவை வழங்குவது மட்டுமின்றி இரட்டிப்பான வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.
இதில் வரும் 2019ஆம் ஆண்டில் முதல் ஏர்பஸ் ஏ321நியோ ரக விமானம் உட்பட 6 விமானங்களை ஏர் ஆசியா கொள்முதல் செய்யவிருக்கிறது. அதிலும் அடுத்தாண்டில் லயன் ஏர் வளர்ச்சியடையாது என்று எதிர்பார்க்கப்படுவதால் அதே விகிதத்தில் நிறைய பயணிகளை ஏற்றிக் கொண்டு ஏர் ஆசியா சேவைகளை மேற்கொள்ளும்.
இந்த வளர்ச்சியில் பயணிகளின் எண்ணிக்கை, விமான விநியோகம், வருமான அதிகரிப்பும் அடங்கும் என்று பத்திரிகையாளர்களிடம் சோபி குறிப்பிட்டார். இதனிடையே, மலேசிய ஏர் ஆசியாவின் சேவைகள் உள்ளூரில் அதிகளவில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் நாட்டின் 60 விழுக்காடு உள்ளூர் விமானச் சேவைகளை இந்நிறுவனம் கொண்டிருக்கிறது. அவற்றில் குவாந்தான், ஈப்போ பகுதிகளில் 4 பாதைகளையும் இதர 29 பாதைகளை மற்ற இடங்களுக்கும் இந்நிறுவனம் பயன்படுத்து வருகிறது.
இந்நிறுவனம் ஒரு குழுமமாக கடந்த 2003ஆம் ஆண்டில் உருவாகிய பிறகு ஏர் ஆசியா தாய்லாந்து, ஏர் ஆசியா இந்தோனேசியா, ஏர் ஆசியா பிலிப்பைன்ஸ், ஏர் ஆசியா ஜப்பான், ஏர் ஆசியா இந்தியா என தனது புதிய கிளைகளை உருவாக்கியுள்ளது.
ஏர் ஆசியாவின் பெயரில் தற்போது செயல்பட்டு வரும் 8 பெரிய நிறுவனங்களில் ஏர் ஆசியா மலேசியாதான் மிகப் பெரிய மற்றும் இலாபகரமான நிறுவனமாகும். இவ்வாண்டின் 3ஆம் காலாண்டில் ஏர் ஆசியா மலேசியாதான் அதிக இலாபத்தைப் பதிவு செய்தது. எனினும், அதில் 48 விழுக்காடு எண்ணெய்ச் செலவினால் சரிவு ஏற்பட்டது.
இதில் 180 இருக்கைகள் கொண்ட 71 ஏ320 ரக விமானம் மற்றும் 186 இருக்கைகள் கொண்ட 23 ஏ320 ரக விமானத்தைப் பயன்படுத்தியதில் இவ்வாண்டு முதன்முறையாக அதன் பயணிகளின் எண்ணிக்கை 3 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியானில் லயன் ஏர் நிறுவனத்திற்கு அடுத்தப்படியாக தனது பயண இருக்கைகளின் எண்ணிக்கை, வருடாந்திரப் பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் 2ஆவது பெரிய விமான நிறுவனமாக ஏர் ஆசியா விளங்குகிறது. அதோடு மட்டுமின்றி இவ்வட்டாரத்தில் 95 விமானங்களைக் கொண்டிருப்பதன் வழி 4ஆவது மிகப் பெரிய விமான நிறுவனமாகவும் ஏர் ஆசியா விளங்குகிறது என சோபி மேலும் கூறினார்.

