Site icon அநேகன்

எரிக்சன் இல்லாமல் விளையாடுவதற்கு டோட்டேன்ஹம் தயாராக வேண்டும் – பொச்சடினோ !

லண்டன், டிச.26-

டென்மார்க்கின் மத்திய திடல் ஆட்டக்காரர் கிறிஸ்டியன் எரிக்சன் இல்லாமல் விளையாடுவதற்கு டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் பழகிக் கொள்ள வேண்டும் என அதன் நிர்வாகி மவுரிசியோ பொச்சடினோ தெரிவித்துள்ளார். டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் கிளப்புடனான ஒப்பந்தத்தை நீட்டிப்பது தொடர்பில் எரிக்சன் இன்னும் இணக்கம் தெரிவிக்காமல் இருக்கிறார் என பொச்சடினோ கூறினார்.

டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் கிளப்புடன், கிறிஸ்டியன் எரிக்சன் இன்னும் 18 மாதங்கள் ஒப்பந்தம் கொண்டுள்ளார். அதே கிளப்பில் உள்ள, ஹாரி கேன், டெலி அலி, சோன் ஹியுங் மின் ஆகியோர் தங்களின் ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளனர். இருப்பினும் எரிக்சன் தனது ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் இருப்பது தமக்கு பெரும் குறையாக உள்ளது என பொச்சடினோ கூறினார்.

கிறிஸ்டியன் எரிக்சன் , ஒப்பந்த நீட்டிப்புக்கு நிச்சயம் இணக்கம் தெரிவிப்பார் என தாம் நம்புவதாக பொச்சடினோ தெரிவித்தார். ஒரு வேளை, எரிக்சன், டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பருடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றால், அந்த ஆட்டக்காரர் இன்றி விளையாட தமது அணி தயாராக வேண்டும் என பொச்சடினோ தெரிவித்துள்ளார்.

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கும் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 6 – 2 என்ற கோல்களில் எவெர்டனை வீழ்த்தியது. பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் மென்செஸ்டர் சிட்டி, முதலிடத்தில் இருக்கும் லிவர்பூலைக் காட்டிலும் நான்கு புள்ளிகளில் பின் தங்கியுள்ளது.

 

Exit mobile version