லண்டன், டிச.27 –
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் தொடர்ந்து அதிரடி படைத்து வரும் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் லீக் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. புதன்கிழமை நடந்த பிரீமியர் லீக் ஆட்டத்தில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் 5 – 0 என்ற கோல்களில் போர்னிமோத்தை வீழ்த்தியது.
லெய்செஸ்டர் சிட்டியிடம் 1- 2 என்ற கோல்களில் மென்செஸ்டர் சிட்டி தோல்வி கண்டதை அடுத்து, டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் தற்போது லீக் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. போர்னிமோத்துக்கு எதிரான ஆட்டத்தில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரின் முதல் கோலை 16 ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியன் எரிக்சன் போட்டார்.
ஏழு நிமிடங்களுக்குப் பின்னர் தென் கொரிய ஆட்டக்க்காரர் சொன் ஹியுங் மின் கோல் எண்ணிக்கையை இரண்டாக அதிகரித்தார். முதல் பாதி ஆட்டம் முடிவடைய 10 நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது மத்திய திடல் ஆட்டக்காரர் லுக்காஸ் மொவ்ரா , மூன்றாவது கோலைப் புகுத்தினார்.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் மேலும் அதிரடியாக விளையாடிய டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் , ஹாரி கேன், சொன் ஹியுங் மின் மூலம் மேலும் இரண்டு கோல்களைப் போட்டது. இந்த வெற்றியின் மூலம், டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் 45 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.
இதனிடையே ஓல்ட் டிரப்போர்ட் அரங்கில் நடந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 3 – 1 என்ற கோல்களில் ஹடேர்ஸ்பீல்ட் அணியை வீழ்த்தியது. இடைக்கால நிர்வாகியாக ஓலே குன்னர் சோல்ஜ்ஸ்கர் பொறுப்பேற்றப் பின்னர் , மென்செஸ்டர் யுனைடெட் கடந்த இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.
சனிக்கிழமை கார்டிப்பை 5 – 1 என்ற கோல்களில் பந்தாடிய, மென்செஸ்டர் யுனைடெட் அணியில் சோல்ஜ்ஸ்கர் சில மாற்றங்களைச் செய்திருந்தார். மத்திய திடல் ஆட்டக்காரர் அந்தோனி மார்சியலுக்கு ஓய்வுக் கொடுத்த வேளையில் , டியாகோ டாலோட், பிரேட் , ஜூவான் மாத்தா போன்ற ஆட்டக்காரர்களை முதன்மை அணியில் களமிறக்கினார்.
முதல் பாதி ஆட்டத்தில் நெமாஞ்சா மாத்திச் போட்ட கோலின் வழி, மென்செஸ்டர் யுனைடெட் 1- 0 என ஆட்டத்தை முடித்து கொண்டது. இரண்டாம் பாதியில் மத்திய திடல் ஆட்டக்காரர் போல் பொக்பா, மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு இரண்டு கோல்களைப் போட்டார்.
இந்த வெற்றியின் மூலம், மென்செஸ்டர் யுனைடெட் லீக் பட்டியலில் தனது ஆறாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட், போர்னிமோத்தை சந்திக்கவுள்ளது.

