Site icon அநேகன்

வழக்கைச் சந்திக்கத் தயார் – டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் !

கோலாலம்பூர், ஜன.1 –

நாட்டில் உள்ள உணவகங்களில் புகைப் பிடிக்க சுகாதார அமைச்சு விதித்துள்ள தடைத் தொடர்பில் அரசாங்க சார்பற்ற அமைப்பு ஒன்று தமக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கை சந்திக்க தாம் தயாராக இருப்பதாக  அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

அந்த அரசு சார்பற்ற அமைப்பைச் சேர்ந்த எழுவர் மற்றும் வழக்கறிஞர் ஹனீப் கத்ரியின்  வழக்கு குறித்த தகவல்களை தாம் ஆராய்ந்திருப்பதாக சுல்கிப்ளி கூறினார். இந்த விவகாரத்தை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம். நாம் உண்மையின் பக்கம் இருக்கின்றோம். எனவே நீதிமன்றத்தில் வழக்கைச் சந்திக்கத் தயார் என டாக்டர் சுல்கிப்ளி தெரிவித்தார்.

கோலாலம்பூர், செராசில் செவ்வாய்கிழமை உணவகம் ஒன்றில் புகைப் பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ஆய்வு செய்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சுல்கிப்ளி இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, இன்னும் அதிகமான இடங்களைப் புகைப் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட இடங்களாக அறிவிக்க அரசாங்கம் எண்ணம் கொண்டிருப்பதாக சுல்கிப்ளி தெரிவித்துள்ளார். தற்போது ஒன்பது வகையான உணவகங்களில் புகைப் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

மேலும் சில இடங்களில் குறிப்பாக, தனியாங்கி சலவை இயந்திரங்கள் அமைந்திருக்கும் இடங்களில் புகைப் பிடிக்க தடை  விதிப்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும் அவர் சொன்னார்.  சம்பந்தப்பட்ட இடங்களை புகைப் பிடிக்க தடை விதிக்கப்பட்ட இடங்களாக அரசாங்க பதிவேட்டில் இடம்பெறச் செய்ய, குறிப்பிட்ட கால அவகாசம் நிர்ணயிக்கப்படவில்லை என அவர் மேலும் கூறினார்.

Exit mobile version