Site icon அநேகன்

கேமரன் மலை இடைத்தேர்தல்; எம்.மனோகரன்தான் வேட்பாளர் -துன் மகாதீர்

கோலாலம்பூர், ஜன.4
இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் கேமரன் மலை நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு பகாங் ஜசெக துணைத் தலைவர்எம்.மனோகரன்தான் வேட்பாளர் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்துள்ளார்.

கடந்த 14ஆவது பொதுத்தேர்தலிலும் வேட்பாளராக இருந்த மனோகரனுக்கு மக்களின் ஆதரவு நிச்சயமாகக் கிடைக்கும். இத்தேர்தலில் பக்காத்தான் வெற்றி பெறுவது உறுதி என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதில் யார் நமக்கு எதிராக போட்டியிடுகின்றனர் என்பதைவிட மற்ற வேட்பாளர்களை நாம் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் கூறினார்.

இன்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

நடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை தொகுதியில் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ சி.சிவராஜின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனோகரன் மனு ஒன்றைக் கடந்தாண்டு தாக்கல் செய்தார். இந்நிலையில் அத்தொகுதியில் சிவராஜ் வெற்றி செல்லுபடியாகாது என்றும் அது ரத்து செய்யப்படும் என்றும் தேர்தல் நீதிமன்றம் கடந்த நவம்பர் 30ஆம் தேதி அறிவித்தது.

அதன் பிறகு சிவராஜ் அத்தொகுதிக்கு வேட்பாளராகத் தகுதியற்றவர் என்று கடந்த டிசம்பர் 28ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனிடையே வரும் 12ஆம் தேதி வேட்பாளர் நியமனம் நடைபெறும் வேளையில், தொடக்கக்கட்ட வாக்களிப்பு 22ஆம் தேதியும், வாக்களிப்பு 26ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.

Exit mobile version