Site icon அநேகன்

கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதி கைமாறுகிறதா?

கேமரன் மலை, ஜன 6-
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் மலேசிய இந்திய காங்கிரஸ் மஇகா போட்டியிடுமா அல்லது தொகுதியை அம்னோவிற்கு விட்டு தருமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் மஇகா சார்பில் போட்டியிட்ட சிவராஜ் சந்திரன் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவரது வெற்றி செல்லாது என தேர்தல் நீதிமன்றம் அண்மையில் அறிவித்த நிலையில் தொகுதிக்கான இடைத்தேர்தல் இம்மாதம் நடைபெறுகின்றது.

ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் மனோகரன் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்ததைத் தொடர்ந்து அவர் வருகை உறுதியாகி இருக்கின்றது. முன்னதாக சிவராஜ் சந்திரனை எதிர்த்து கடந்த பொதுத் தேர்தலிலும் இவர் தான் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அந்த தேர்தலில் முறைகேடு நிகழ்ந்துள்ளது என தேர்தல் நீதிமன்றத்தில் மனோகரன் தான் புகார் செய்திருந்தார். இந்நிலையில் அந்த தொகுதியில் மறு தேர்தலுக்கான அதற்கான வேலைகள் நடந்து வரும் வேலையில் இன்னமும் தேசிய முன்னணி சார்பில் வேட்பாளர் யார் என்பது முடிவாகவில்லை.

இதனிடையே மலேசிய தேர்தல் ஆணையம் சிவராஜ் சந்திரன் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பதோடு ஐந்து ஆண்டுகள் அவர் வாக்களிக்கவும் கூடாது என்ற அதிகாரப்பூர்வ கடிதத்தை அனுப்பி உள்ளது.

சிவராஜ் சந்திரனுக்கு பதிலாக அக்கட்சியின் மற்றொரு உதவித் தலைவர் முருகையா அல்லது உமா ராணி குழுமத்தின் தலைவர் ராமலிங்கம் ஆகியோர் கேமரன் மலை வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற சூழ்நிலையில் இப்போது அத்தொகுதியில் மஇகா போட்டியிடாது என்ற சூழ்நிலையும்  எழுந்துள்ளது.

பகாங் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ வான் ரொஸ்டி பின் வான் இஸ்மையில் கேமரன் மலை தொகுதியில் உள்ள ஜெலாய் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டார். இப்போது அவர் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விரும்புவதாக செய்திகள் கசிந்துள்ளன. இதனால் தொகுதியை விட்டு தரும் சூழ்நிலை எழுந்துள்ளது.

கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் மஇகா போட்டியிடுமா அல்லது அம்னோவிற்கு அந்த சீட்டை விட்டு தருமா என்ற கேள்வியும் இப்பொழுது எழுந்திருக்கின்றது.

இறுதியில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை தேசிய முன்னணியின் முதன்மை உறுப்பு கட்சியின் வேட்பாளர் நிறுத்தப்படலாம். அதுதான் இறுதியான தகவலும் என்ற செய்தியும் இப்பொழுது பரவ தொடங்கியுள்ளது.

Exit mobile version