Site icon அநேகன்

கேமரன் மலை இடைத்தேர்தல்; டான்ஸ்ரீ கேவியஸ் போட்டி

கோலாலம்பூர், ஜன 6-
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் மைபிபிபி கட்சி தனித்து போட்டியிடும் என அதன் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் அறிவித்துள்ளார்.

டத்தோ சிவராஜ் சந்திரனின் வெற்றி செல்லாது என தேர்தல் நீதிமன்றம் அறிவித்ததை தொடர்ந்து கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் இம்மாதம் 26ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகின்றது.

இந்த இடைத் தேர்தலில் ஜசெக சார்பில் வழக்கறிஞர் மனோகரன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. தேசிய முன்னணி இன்னமும் தனது வேட்பாளரை அறிமுகப்படுத்தவில்லை. இந்நிலையில் மைபிபிபி கட்சி இத்தொகுதியில் தனித்து போட்டியிடும் என டான்ஸ்ரீ கேவியஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் தங்கள் கட்சியினர் வாக்காளர்களை சேகரிப்பதற்கு தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த நிலையில் அங்கு 3,000 வாக்காளர்களை தங்களது கட்சி கொண்டிருப்பதாக இன்று மைபிபிபி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அங்குள்ள விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்வு காணும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இங்குள்ள மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் என்ன என்பது குறித்து தாம் முழுமையாக அறிந்திருப்பதாகவும் அதற்கான செயல் திட்டங்களை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தாம் இத்தொகுதியில் போட்டியிடுவது குறித்து முன்னமே அறிவித்திருப்பதால் மஇகா இத்தொகுதியில் போட்டியிடாது என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக கூறினார்.

மக்களின் மகத்தான ஆதரவின் அடிப்படையில் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினராக தாம் தான் தேர்ந்தெடுக்கபடுவதாக அவர் உறுதியளித்தார்

Exit mobile version