Site icon அநேகன்

பாரிசான் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து நஸ்ரி நீக்கப்பட வேண்டும்! -மசீச கோரிக்கை

கோலாலம்பூர், பிப்.26-

தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ நஸ்ரி அஜிஸ் நீக்கப்பட வேண்டும் என்று மசீச கோரிக்கை விடுத்துள்ளது.

“நஸ்ரிக்கு எதிராக அம்னோ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அழுகிய ஓர் ஆப்பிளால் கூடை முழுமையும் உள்ள ஆப்பிள்கள் கெட்டுப்போவதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது. பாரிசான் தலைவராக அவர் தொடர்ந்து நீடித்தால் இது அம்னோ,மசீச மற்றும் மஇகா ஆகியவற்றுக்கிடையிலான நீண்ட கால ஒத்துழைப்பைப் பாதித்துவிடும்” என்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மசீச தலைமைச் செயலாளர் டத்தின்ஸ்ரீ சியூ மெய் ஃபன் தெரிவித்தார்.

தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளின் நிலைக்கு 1996 ஆம் ஆண்டு கல்வி திட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கல்வி அமைச்சராக பதவியேற்றிருந்த காலத்தில்தான் 1961 கல்வி சட்டம் பிரிவு 21(2) நீக்கப்பட்டது என்றார் சியூ.

“தமிழ் மற்றும் சீனப் பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று எந்த அடிப்படையில் இவர் கூறுகிறார்?” என்று வினவினார் சியூ.

எப்போதும் ஜசெகவைப் புகழ்ந்துரைத்து மசீச வையும் பாரிசானின் இதர உறுப்பு கட்சிகளையும் சிறுமைப்படுத்துபவரே நஸ்ரி என்றார் அவர்.

“ரோபர்ட் குவாக்கை அவமதித்தது உள்பட இவரின் முரட்டுத்தனமான மற்றும் திமிரான பேச்சும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி அடைந்த தோல்விக்கான காரணங்களில் அடங்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“ஆகையால் நஸ்ரி பாரிசானின் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து அவசியம் நீக்கப்பட வேண்டும். அவர் இப்பதவிக்குப் பொருத்தமானவர் அல்ல”என்றார் சியூ.

மலாய்க்காரர் அல்லாதோர் அவரவர் மொழி பள்ளிக் கூடத்தில் பயிலும் சிறப்புச்  சலுகையைப் பெற்றிருப்பதால் மலாய்க்காரர்களின் சலுகையைப் பற்றி இவர்கள் கேள்வி எழுப்பக் கூடாது என்று கடந்த  ஞாயிற்றுக்கிழமை பிரசார கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில் நஸ்ரி குறிப்பிட்டார்.

Exit mobile version